மத்திய பட்ஜெட்: மார்க்சிய கம்யூனிஸ்ட் கண்டனம்!
மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் அறிவிப்பு வெளியானதிலிருந்து பட்ஜெட் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும்நிலையில், மத்திய பட்ஜெட் சாதகமானதான இல்லை என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். தொடர்ந்து, மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் ஆகியோரும் கருத்து கூறினர். இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில் அவர்கள் கூறியதாவது, ``நான்கில் மூன்று இந்தியருக்கு மாத வருமானம் ரூ. 15 ஆயிரம்கூட இல்லாத நிலையில், அதிகரித்து வரும் சுகாதார, கல்வி, அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க முடியாமல் ஏழை, எளியக் குடும்பங்கள் திணறி வரும் நிலையில், ஏழை,எளிய மக்களின் நலன்களை மையமாக கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புக்கள் எதையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை.
இதையும் படிக்க:கழிவுநீர்த் தொட்டி விவகாரம்: அனைத்து வீட்டு உரிமையாளர்களுக்கும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
பட்ஜெட்டில் உர மானியம் ரூ. 3400 கோடிகளும், பெட்ரோலிய மானியம் ரூ. 2,600 கோடிகளும் குறைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே விவசாயத்தையும், எரிவாயு விலைகளையும் கடுமையாக பாதிக்கும். இதனால் ஏழைக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். உணவு மானியம் சற்று உயர்ந்ததுபோலத் தெரிந்தாலும் விலைவாசியை ஒப்பிடும்போது அது உயரவில்லை. எனவே, இது உணவுப் பொருள்கள் விலைகளை அதிகரிக்க செய்திடும். பி.எம். கிசான் நிதி, பயிர்க்காப்பீட்டுக்கான நிதிகள் எதுவும் உயர்த்தப்படவில்லை.
மத்திய அரசினுடைய ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளால் மிகவும் மோசமாக நலிவடைந்துள்ள சிறு,குறு நடுத்தர தொழில்களைப் பாதுகாக்கவும், வலுப்படுத்தவும் எந்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதேபோன்று பெரிதும் எதிர்பார்த்த விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்துவது, வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வது, இடுபொருட்களுக்கான விலைகளை குறைப்பது பற்றி எந்த அறிவிப்பையும் நிதியமைச்சர் அறிவிக்கவில்லை.
தொடர்ந்து கிராம மக்கள் போராடி வரும் 100 நாள் வேலை திட்டத்துக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, வேலைநாள்களை அதிகரிப்பது, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலையளிப்பது போன்ற எந்த அறிவிப்பும் இல்லை. அதிகரித்து வரும் வேலையின்மை, ஏழை,எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதார மேம்பாடு, தொடர்ந்து உயர்ந்து வருகிற அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது, பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு விலை குறைப்பு உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் நலன்களுக்கான எந்த நடவடிக்கைகளும் பட்ஜெட்டில் இல்லை.
மத்திய அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்புகிற திட்டமும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. சமூகப் பாதுகாப்புடன்கூடிய வேலை வாய்ப்பினை உருவாக்க எந்த முயற்சியும் இல்லை. தொழிற்சங்கங்களின் கோரிக்கையான மாதம் ரூ. 26,000 குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த பட்ஜெட்டிலும் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. காப்பீட்டுத்துறையில் தனியார் ஆதிக்கம் அதிகரித்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். மின்சாரத்தை தனியார்மயமாக்கிட மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புயல் மற்றும் வெள்ளம் பேரிடர் நிவாரணங்களுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. மிகவும் வஞ்சிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டுக்கான ரயில்வே வளர்ச்சி திட்டங்கள், நெடுஞ்சாலைகள், மதுரை, கோவை மெட்ரோ திட்டம் போன்ற அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொடர்ந்து பாஜகவினால் புறக்கணிக்கப்படும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பட்ஜெட்டிலும் தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பாஜகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
அதுமட்டுமின்றி காஷ்மீர், மணிப்பூர் மாநிலங்கள் கலவரம் மற்றும் வன்முறைகளை சந்தித்து மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் இம்மாநிலங்களை மேம்படுத்துவதற்கும், புனரமைப்பதற்கும் எந்த வகையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வேளாண், கல்வி, சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை. அதேபோன்று, ஊரக வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் போதுமானதல்ல. நகர்ப்புற ஏழைகளின் குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லை. இத்துறைக்கான ஒதுக்கீடும் போதுமானதாக இல்லை. பட்டியலின - பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கு திட்டங்கள் அறிவிக்காமல், சில வெற்று அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளனர்.