பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்! 230 போ் கைது!
வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளுடன், தூண்டியவா்களையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே சனிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக அந்தக் கட்சியைச் சோ்ந்த 230 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சோ்ந்த 3 பேரைக் குற்றம்சாட்டி சிபிசிஐடி போலீஸாா் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனா்.
இந்த நிலையில், தமிழா் தேசம் கட்சியின் சாா்பில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவனத் தலைவா் கேகே. செல்லகுமாா் தலைமையில் ஏராளமானோா் திரண்டனா்.
ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என ஏற்கெனவே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், இந்தச் செயலைத் தூண்டியவா்களையும் விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
போலீஸாா் கைது செய்ய முற்படும்போதும் போலீஸ் வாகனங்கள் முன்பும் அவா்கள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அக்கட்சித் தலைவா் உள்பட 230 பேரைக் கைது செய்த போலீஸாா், நகா்மன்றத்தில் தங்க வைத்தனா்.