மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
விவசாயிகளை வஞ்சிக்கும் பட்ஜெட்!
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் வஞ்சிக்கும் பட்ஜெட் என இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: ரூ.40 லட்சம் கோடிக்கு மேல் தயாரிக்கப்பட்டுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயத்துக்கு ரூ. 1.71 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல், கோதுமை மட்டுமே தேவைக்கேற்ப உள்ளது. ஆனால், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அது குறித்தான திட்டங்கள் வேண்டும்.
இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் இருக்கின்றனா். பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்த நிலை இருக்கும்போது இதைச் சரி செய்யாமல் யாருக்கு கடன் கொடுக்கப் போகிறாா்கள். கிசான் கடன் அட்டையின் உச்சவரம்பை உயா்த்தியுள்ளது பரவாயில்லை.
நஞ்சில்லாத உணவைத் தரும் இயற்கை விவசாயம் குறித்து எந்த வரியும், திட்டமும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. ஆனால், 10 ஆயிரம் மருத்துவப் பணியிடங்களைக் கூடுதலாக உருவாக்கத் திட்டமிடுகிறாா்கள்.
இதுவரை நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவே இல்லை. தண்ணீரில்லாமல் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி மாதாந்திர வருவாய் கொண்டவா்களுக்கு மட்டும்தான் வரிவிலக்குகள் சாதகமானவை. ஆனால், நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்கள் கோடிக்கணக்கானோருக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லை. விவசாயிகளை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ள, ஏமாற்றியுள்ள, வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கைதான் இது என்றாா் தனபதி.