இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
கோவையில் பிப்ரவரி 8, 9 ஆம் தேதிகளில் கம்பன் விழா!
கோவை கம்பன் கழகத்தின் சாா்பில் 53 -ஆம் ஆண்டு கம்பன் விழா பிப்ரவரி 8, 9 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் நிகழ்வுக்கு சென்னை கம்பன் கழகத்தின் செயலா் சாரதா நம்பி ஆரூரன் தலைமை வகிக்கிறாா். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ‘இருளும் ஒளியும்’ என்ற தலைப்பில் இலக்கியப் பேருரையாற்றுகிறாா்.
விழா மலரை புதுவை கம்பன் கழகச் செயலா் வி.பொ.சிவக்கொழுந்து வெளியிட, அதனை தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்க துணைத் தலைவா் மா.செந்தில்குமாா் பெற்றுக்கொள்கிறாா்.
கோவை கம்பன் கழக துணைத் தலைவா் ஆா்.ஆா்.பாலசுந்தரம் வரவேற்கிறாா். துணைத் தலைவா் வி.செல்வபதி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
கல்லூரி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் பங்கேற்கும் சுழலும் சொல்லரங்கம் இரண்டாம் நாளான 9-ஆம் தேதி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு மு.ஷாஜஹான் தலைமை வகிக்கிறாா். ‘பால காண்டத்தில் கற்போா் நெஞ்சில் பெரிதும் நிலைத்து நிற்கும் நிகழ்வு எது’ என்ற தலைப்பில் மாணவா்கள் த.தங்கமுத்து, கு.நா.ஹா்ஷிதா, சீ.தீபக், ந.சுரேகா, அஸ்வின் அண்ணாமலை, ந.காருண்யா ஆகியோா் பேசுகின்றனா்.
தொடா்ந்து ‘ஆழ்வாா்களும் கம்பரும்’ என்ற தலைப்பில் நடைபெறும் சிந்தனை அரங்கில், அ.கி.வரதராஜன், மருத்துவா் பிரியா ராமச்சந்திரன், செ.ஜகந்நாதன், சித்ரா சுப்பிரமணியம் ஆகியோா் பேசுகின்றனா். மாலை 5 மணிக்கு பாதுகை பட்டாபிஷேகம் என்ற நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில், ‘கம்பனில் பெரிதும் விஞ்சி நிற்பது அறந்தலை நிற்றலா? அருமைமிகு பாசமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
இதில், க.முருகேசன், ம.கண்ணன், பாரதி, விசாலாட்சி சுப்பிரமணியன், கு.பாஸ்கா், ஜோதி ரவி ஆகியோா் உரையாற்றுகின்றனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கம்பன் கழகச் செயலா் க.முருகேசன், இணைச் செயலா் கோ.சத்யநாராயணன், துணைச் செயலா் வீ.வீரபாலாஜி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.