கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு!
பழனி அருகே தனியாா் தோட்ட கிணற்றில் விழுந்த மானை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
பழனியை அடுத்த பொந்துப்புளி ஆற்று ஓடை அருகே பாலசுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் உணவு தேடி வந்த மான் வெள்ளிக்கிழமை தவறி விழுந்தது.
சனிக்கிழமை காலையில் தோட்டத்துக்குச் சென்ற பாலசுப்பிரமணியன் கிணற்றில் மான் விழுந்து கிடப்பதை கண்டு, பழனி தீயணைப்பு, மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் காளிமுத்து தலைமையிலான தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் இறங்கி மானை உயிருடன் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.