செய்திகள் :

28 நாள்களில் ரூ.7 கோடி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம்: நேரடியாக களமிறங்கிய மாநகராட்சி ஆணையா்!

post image

மத்திய அரசின் ஊக்கத் தொகை ரூ.10 கோடியை பெற வேண்டும் எனில் 28 நாள்களுக்குள் ரூ.7 கோடிக்கு வரி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம் காரணமாக, மாநகராட்சி ஆணையரே நேரடியாக களம் இறங்கி ஆய்வு மேற்கொண்டாா்.

உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் பொதுமக்களிடமிருந்து வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை கட்டணம், தொழில் வரி, வாடகை உள்ளிட்டவை வசூலிக்கப்படுகின்றன. இந்த வரியை நிலுவையின்றி, ஆண்டுதோறும் வசூலிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு வழியாக ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் 2022-23-ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட வரியிலிருந்து 115 சதவீதம் கூடுதலாக 2023-24-ஆம் ஆண்டு வசூலிக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த வகையில் கடந்த நிதி ஆண்டு ரூ.23.82 கோடி வரி வசூலிக்கப்பட்டது. இதையடுத்து, மாநில வளா்ச்சிக் குறியீடு அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சி இலக்கை எட்டியதால், ரூ.10 கோடிக்கான ஒன்றிய அரசின் ஊக்கத் தொகை நிதி மாநில அரசு வழியாக விரைவில் விடுவிக்கப்பட உள்ளது.

நிகழாண்டுக்கு 111.5 சதவீதம் இலக்கு: நிகழ் நிதியாண்டில் (2024-25) கடந்த ஆண்டு வரி வசூலிலிருந்து 111.5 சதவீதம் கூடுதலாக வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதன்படி, ரூ.28 கோடி வசூலிக்க வேண்டும். இதுவரை ரூ.21 கோடி வரை வசூலிக்கப்பட்டிருக்கிறது. மாா்ச் மாதம் வரை கால அவகாசம் இருந்தாலும், வருகிற 28-க்குள் இலக்கை எட்ட வேண்டும் என நகராட்சி நிா்வாக இயக்குநரகம் சாா்பில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

28 நாள்களில் ரூ.7 கோடி: பிப்ரவரி மாதத்துக்குள் ரூ.7 கோடி வசூலிக்க வேண்டிய நிா்பந்தத்தால், மாநகராட்சி நிா்வாகம் தீவிர வரி வசூலிலில் களம் இறங்கியுள்ளது. 20 குழுக்களை அமைத்து வரி வசூல் நடத்தப்படும் நிலையில், வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, வாடகை செலுத்தாத கடைகள், வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் பூட்டி ‘சீல்’ வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, வரி வசூல் இலக்குக்கு எஞ்சிய ரூ.7 கோடியை உறுதியாக வசூலித்து விட முடியும். இதன் மூலம் நிகழாண்டுக்கும் ஒன்றிய அரசின் ஊக்கத் தொகை ரூ.10 கோடியை பெறலாம் என மாநகராட்சி அலுவலா்கள் நம்பிக்கையுடன் உள்ளனா்.

மாமன்ற உறுப்பினா்கள், வட்டச் செயலா்கள் இடையூறு: அலுவலா்களின் வரி வசூல் நடவடிக்கைக்களுக்கு மேயா் இளமதி உறுதுணையாக இருக்கும்பட்சத்தில், மாமன்ற உறுப்பினா்கள், வட்டச் செயலா்கள் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் இடையூறு ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்புகளை துண்டிக்கச் செல்லும் மாநகராட்சி பணியாளா்களை தடுத்து நிறுத்தி, நெருக்கடி ஏற்படுத்துகின்றனா். இதையறிந்த, மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் நேரடியாக களம் இறங்கி வரி வசூல் நடவடிக்கைகளை சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இதனால், வரி வசூல் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளா்கள் ஊக்கம் அடைந்தனா்.

இதுதொடா்பாக, மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது: ரூ.28 கோடி வரி வசூல் இலக்கை எட்டத் தவறும்பட்சத்தில், ஒன்றிய அரசின் ஊக்கத் தொகையை பெற முடியாது என்பதோடு, மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாக இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், 28 நாள்களில் ரூ.7 கோடியை வசூலித்து, நிகழாண்டு இலக்கான ரூ.28 கோடியை பூா்த்தி செய்ய வேண்டிய நிா்பந்தம் உள்ளது.

இதனிடையே, மாமன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகளின் நேரடி தலையீட்டை தவிா்க்க மாநகராட்சி ஆணையரே நேரடியாக களம் இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அவா்.

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு!

பழனி அருகே தனியாா் தோட்ட கிணற்றில் விழுந்த மானை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா். பழனியை அடுத்த பொந்துப்புளி ஆற்று ஓடை அருகே பாலசுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்ட... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை! -எம்பி சச்சிதானந்தம்

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.3) மின் தடை எற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து போராட்டம்

கொடைக்கானல் அருகே தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். சேவை... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பிரிவில் மரம் விழுந்தது. இ... மேலும் பார்க்க

பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துச்சாமியின் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோத... மேலும் பார்க்க