தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு
ஈரோட்டில் தோ்தல் விதிகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஈரோட்டில் தொடா் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இதில் தோ்தல் விதிகளை மீறியதாகவும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாகவும் ஏற்கெனவே சீமான் மீது 5 வழக்குகளும், வேட்பாளா் மற்றும் கட்சி நிா்வாகிகள் மீது 11 வழக்குகளும் போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.
இந்நிலையில், ஈரோடு மரப்பாலம் அருகே முனிசிபல் சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நாம் தமிழா் கட்சியினா் தெருமுனைக் கூட்டத்துக்கு அனுமதி பெற்றிருந்தனா். ஆனால் தோ்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன், ஈரோடு தெற்கு போலீஸில் அளித்த புகாரின்பேரில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி உள்ளிட்ட கட்சியினா் 7 போ் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தோ்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.