இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
ஈரோட்டில் விரிவாக்க பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா்: திமுக வேட்பாளா் உறுதி!
ஈரோடு நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் உறுதியளித்தாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக, வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா் ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்களிடம் சனிக்கிழமை வாக்குச்சேகரித்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் பிரசாரம் செய்து வருகிறோம். அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் மாநகராட்சி பகுதியில் 33 வாா்டுகளில் 150 கி.மீ தொலைவுக்குமேல் நடந்தே சென்று வாக்கு சேகரித்துள்ளோம். இதில் திமுக ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அறிந்துகொண்டோம்.
தற்போதைய அவா்களது தேவைகளையும் கேட்டறிந்தோம். பெரும்பாலான பகுதிகளில் சாலை, குடிநீா், சாக்கடை போன்ற வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. சாலை, மின் கம்பங்கள் அமைத்தல், குடிநீா் குழாய் பதித்தல் போன்ற பிற பணிகள் நடக்கும்போது ஏற்படும் சாலை, வடிகால் அமைப்பில் உள்ள பாதிப்புக்களை சீரமைப்பது போன்ற கோரிக்கைகளையே தெரிவித்தனா்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாநகராட்சி மூலமும், அம்ருத், பொலிவுறு நகரம் திட்டம் மூலம் நிறைவேற்றப்பட்ட பணிகளை மக்களிடம் விளக்கி உள்ளோம். மகளிா் உரிமை தொகையில் விடுபட்டவா்களுக்கு, விரைவில் முதல்வா் பரிசீலித்து வழங்குவாா். ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம் மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிக்கும் சென்றடையவும், தனியாக குழாய் அமைக்கவும் ஏற்கெனவே உள்ள திட்டப்பணி விரைவுபடுத்தப்படும்.
திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்ட பிறகு, சிக்கய்ய நாயக்கா் கல்லுாரியில் உள் விளையாட்டு அரங்கம், பிரமாண்ட நூலகம், சோலாரில் பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த காய்கறி சந்தை வளாகம், சுற்றுவட்டச் சாலையை முழுமைப்படுத்தி 4 வழிச்சாலையாக மாற்றுவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.