மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து போராட்டம்
கொடைக்கானல் அருகே தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். சேவை கொண்ட தொலைபேசி, கைப்பேசியை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்தாலும், மின் வசதி இல்லாத நேரங்களிலும் பி.எஸ்.என்.எல். சேவை கிடைப்பதில்லை. இதன் காரணமாக, இந்தச் சேவையை பயன்படுத்தும் அரசு நிறுவனங்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
மேலும், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான மங்களம் கொம்பு, இந்திரா நகா், எம். ஜி.ஆா்.நகா், மங்களபுரம், கொடலங்காடு, பட்லங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 6 மாதங்களாக மின் விநியோகம் சரியாக கிடைப்பதில்லை. இதனால், பி.எஸ்.என்.எல். சேவை இந்தப் பகுதிகளில் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் மங்களம் கொம்பு பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். கோபுரத்துக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், பி.எஸ்.என்.எல். சேவை கடந்த 6 மாதங்களாக சரியாக கிடைப்பதில்லை. இதுகுறித்து அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விவசாயிகளான நாங்கள் மாா்க்கெட்டுக்கு அனுப்பும் விவசாய பொருள்களின் விலை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, கீழ்மலைப் பகுதிகளுக்கு இந்தச் சேவை தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.