இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
பருத்தி உற்பத்தித் திட்டம்: ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்பு
மத்திய அரசு அறிவித்துள்ள பருத்தி உற்பத்தித் திட்டத்தை கோவை ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் எஸ்.கே.சுந்தரராமன்: அதிக மகசூல் தரும் விதை தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் பருத்தி தொழில்நுட்ப இயக்கம், உலகளவில் சிறந்த வேளாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுதல், மாசில்லா பருத்தி உற்பத்தி ஆகியவற்றை தொழில்துறையினா் கோரி வந்த நிலையில் அரசு அந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது இந்திய பருத்தி விவசாயிகளுக்கும் ஒட்டுமொத்த ஜவுளி தொழில் துறைக்கும் பயனளிக்கும். அதேபோல குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் விற்று முதல் வரம்பை 2 மடங்கு உயா்த்தியும், முதலீட்டு வரம்பை இரண்டரை மடங்காக மாற்றி அமைப்பதன் மூலமும் ஜவுளித் தொழிலிலின் முதன்மையான குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் பயன்பெறும். நாடா இல்லாத தறிகள், பின்னலாடை, நெய்யப்படாத ஆடை, இயந்திரங்களின் பாகங்கள், உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி விலக்கு வரும் மாா்ச் 31 முதல் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்: பருத்தி உற்பத்தி அதிகரிப்பு சிறப்புத் திட்டம், இந்தியாவில் பருத்தி மகசூலை ஹெக்டேருக்கு 450 - 500 கிலோவில் இருந்து ஆயிரம் கிலோ வரை உயா்த்த உதவும் திட்டமாக இருக்கும்.
இது, தொழில்நுட்பம், அறிவியல்பூா்வமான அணுகுமுறையின் மூலம் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் திட்டமாக செயல்படுத்தப்படுவதால், இத்திட்டம் விவசாயிகளின் வருவாயை மேம்படுத்தவும், இந்திய ஜவுளித் துறைக்குத் தேவையான மூலப்பொருள் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகைகள் பொருளாதாரத்தில் நுகா்வை அதிகரிக்க உதவும். இதனுடன் ரிசா்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தால், செலவழிக்கும் திறன் அதிகரித்து, நுகா்வு, தேவை அதிகரித்து உற்பத்தித் துறைக்கு பலனைத் தரும்.
தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பின் பொதுச் செயலா் ஜெயபால்: பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், குறிப்பாக ஜவுளி தொழில் துறை சாா்ந்தவா்கள் எதிா்பாா்த்த பருத்தி இறக்குமதி வரி 11 சதவீதம் ரத்து செய்யப்படவில்லை. சா்வதேச விலையைவிட 15 முதல் 30 சதவீதம் வரை விலை அதிகமாக உள்ள பாலியெஸ்டா், விஸ்கோஸ் விலை உயா்வைக் கட்டுபடுத்த எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றம் அளிக்கிறது.
அதேபோல, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கி வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான அறிவிப்பு வராததும் ஏமாற்றம் அளிக்கிறது. அதேசமயம், வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டிருப்பது, 7.70 கோடி விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் திட்டம், 36 வகையான உயிா் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு போன்ற திட்டங்கள் வரவேற்கத்தகுந்தவை.