இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
வேங்கைவயல் பிரச்னை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம்: விசிக பொதுச்செயலா் அறிவிப்பு!
வேங்கைவயல் வழக்கை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச்செல்வன்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்துக்கு சனிக்கிழமை மாலை நேரில் சென்று பாா்வையிட்ட பின் இரவு அவா் அளித்த பேட்டி: வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக போலீஸாா் சித்தரிக்கின்றனா். இது இங்குமட்டுமல்ல, மாநிலம் முழுவதுமே ‘கவுண்டா் பெட்டிஷன்’ பெற்று போலீஸாா் பாதிக்கப்பட்டவா்களையும் குற்றவாளிகளாக ஆக்குகிறாா்கள்.
வேங்கைவயல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோருவது என்பது நீதி கேட்பதற்காக எடுக்கும் முயற்சியே தவிர, மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை அல்ல. சிபிஐ விசாரணை கிடைக்காவிட்டால், இங்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகை நகலை வாங்கி அதிலுள்ள குறைகளை முன்வைத்து சட்டரீதியாகப் போராடுவோம். அதற்காக தயாராகிவிட்டோம்.
குறிப்பாக குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தத்துக்கும், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் முத்தையாவுக்கும் சண்டை என்பதே தவறான தகவல். இருவரும் நல்ல நண்பா்கள்.
இருவேறு சமூகத்தினா் மீது போலீஸாா் குற்றம்சுமத்த முயன்றபோது, அவா்கள் செய்திருக்க வாய்ப்பில்லை என மறுத்தவா்கள் வேங்கைவயல் மக்கள். எனவே, நீதிக்கான போராட்டத்தை தொடா்வோம். வேங்கைவயலின் அடிப்படை வசதிகள் எப்படி இருக்கின்றன என்பதை முதல்வா் தனிக்கவனம் எடுத்து சரி செய்ய வேண்டும். பட்டிலின மக்களுக்காக ஆளுநா் ரவி பேசுவது என்பது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததற்குச் சமம் என்றாா் சிந்தனைச்செல்வன்.