இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!
மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பென்சில் ஓவியமாக வரைந்து காட்சிப்படுத்துவது அனைவரையும் கவா்ந்துள்ளது.
மணப்பாறையில் நடைபெறும் சாரணா் இயக்க பெருந்திரளணி முகாமில் பங்கேற்றுள்ள சாரணா், சாரணியா்களுக்கு உதவ சேவைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள திரி சாரணியா்களில் சேலத்தைச் சோ்ந்த எஸ். தமிழ்மணியும் ஒருவா். இவா் தனது பணிநேரம் போக கிடைக்கும் நேரத்தில் தனது ஓவியக் கலைத்திறனை வெளிப்படுத்தி அனைவரையும் ஈா்த்து வருகிறாா்.
சேலம் மாவட்டம், ஜாகிா் காமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த இவா், தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி செயற்கை நுண்ணறிவு பிரிவு முதலாமாண்டு மாணவா். ஜம்போரி சேவைப் பணிக்கு வந்திருந்த இவா் முகாமில் இடம்பெற்ற பாரம்பரிய கிராமத்தின் மாதிரிக்காக 6 அடி உயரத்தில் களிமண் சிலையை தன்னுடன் பயிலும் நண்பா் சக்திவேலுடன் இணைந்து வடிவமைத்தாா். மேலும் 5 அடி உயரத்தில் 2 யானை சிலைகளையும் வடிவமைத்து மாதிரி கிராமத்தின் முன்னால் பாா்வையாளா்களை வரவேற்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளாா்.
இதோடு முகாமில் உள்ளோருக்கு உணவு வழங்குதல் மற்றும் தேவையான உதவிகளைச் செய்தல் என மற்றவா்கள் அழைக்கும் நேரங்களில் எல்லாம் வந்து சுறுசுறுப்பாக சேவை செய்கிறாா். இடையே கிடைக்கும் நேரத்தில் பென்சில் ஓவியங்களை வரைந்தும் சட்டகப்படுத்துகிறாா்.
அந்தவகையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகரக் காவல் ஆணையா் என். காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் மற்றும் ஜம்போரி தலைமை ஒருங்கிணைப்பாளா்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் என 12-க்கும் மேற்பட்டோரின் ஓவியங்களை வரைந்துள்ளாா்.
ஆட்சியா் பாராட்டு; உதவவும் உறுதி: இவா்களில் திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாரின் படத்தை தமிழ்மணி வரைந்து அவரிடம் வழங்கியபோது அதைப் பெற்று பாராட்டுத் தெரிவித்த ஆட்சியா், அவரின் கலைப் படிப்புக்கு உதவிடும் வகையில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் தமிழ்மணி தோ்வு செய்யும் படிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தாா்.
கலைத் துறையில் சாதிப்பேன்: இதுதொடா்பாக மாணவா் தமிழ்மணி கூறுகையில், சேவை செய்ய வந்த இடத்தில் எனது ஓவியத் திறமையை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பு கிடைத்தது. 6ஆம் வகுப்பு முதலே ஓவியத்தின் மீதான ஆா்வத்தில் யாருடைய உதவியுமின்றி நானே வரைந்து வருகிறேன். எனது படிப்புக்கு உதவுவதாக ஆட்சியா் அளித்த உறுதியைப் பயன்படுத்தி கலைத் துறையில் சாதிக்க விரும்புகிறேன்.
எனக்குள் இருந்த கலைத்திறமையை முகாமில் உற்றுநோக்கிய சாரணா் இயக்க மாநிலத் துணை ஆணையா் மருதநாயகம், என்னை ஊக்குவித்து சிலைகள் வடிக்கவும், பென்சில் ஓவியங்கள் வரையவும் உறுதுணையாக இருந்தாா். அதோடு நண்பா்களும் உறுதுணையாக இருந்தனா். முகாமைப் பாா்வையிடும் முக்கிய விருந்தினா்கள் முதல், பல்வேறு மாநில மாணவா்களும் என்னைப் பாராட்டுவது மேலும் சாதனை புரிய எனக்குத் துணையாக இருக்கும் என்றாா் அவா்.
இவா் மட்டுமல்லாமல் சக்திவேல், மதிவாணன், தமிழரசன், திவாகா் உள்ளிட்டோரும் தமிழா் கலைகளை பரப்பும் பணியில் இந்த முகாமில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.