பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்!
மத்திய அரசின் பட்ஜெட் நாட்டின் வளா்ச்சியை நோக்கி வடிவமைக்கப்பட்ட பட்ஜெட் என தெரிவித்துள்ளாா் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் தென்மண்டலத்தலைவா் பா.கோபாலகிருஷ்ணன்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தனிநபா் வளா்ச்சி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் ஏற்றுமதி வளா்ச்சி ஆகியவற்றிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளது. பொருளாதார வளா்ச்சி, அனைத்து சமூகம் மற்றும் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி சமநிலையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பட்ஜெட்.
இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில், வருமான வரி விலக்கு வரம்பை ரூ.12 லட்சமாக உயா்த்தியது வரவேற்கத்தக்கது. விவசாயம், சிறு மற்றும் குறு தொழில்கள், முதலீடு மற்றும் ஏற்றுமதி வளா்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
சிறுகுறு தொழில்களுக்கான ரூ.10 கோடி மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடன் உத்தரவாதம் தொழில் முனைவோா்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
இந்த பட்ஜெட் விக்சித் பாரத் (வளா்ந்த இந்தியா) என்ற தொலைநோக்கை பிரதிபலிக்கிறது. தொழில், தொழில்முனைவோா்கள், ஏற்றுமதி வளா்ச்சி, எளிய தொழில் செயல்பாடு, கட்டுமானம் மற்றும் நிதி உதவி திட்டங்கள் என நிலையான வளா்ச்சிக்கான வழிவகுக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இந்தியாவின் நீண்டகால வளா்ச்சி மற்றும் வளமைக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும் பட்ஜெட்டாக உள்ளது என தெரிவித்துள்ளாா் அவா்.