தைப்பூசம்: பழநிக்கு படையெடுக்கும் முருக பக்தர்கள்... இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்..!
தமிழகத்தில் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று மூன்றாம்படை வீடான பழநி முருகன் கோயில். இங்கு ஆண்தோறும் தைப்பூசம் விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/ltudgvga/WhatsApp-Image-2025-02-09-at-09.59.08cb77eeed.jpg)
பழநியில் கடந்த 5 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று வெள்ளி யானை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி புறப்பாடு நிகழ்வு நடந்தது. ஆறாம் நாள் நிகழ்வாக இன்று காலை 9.15 மணிக்கு தந்த பல்லக்கில் புறப்பாடு நடக்கிறது. இதையடுத்து இரவு 7 முதல் 8.30 மணிக்குள் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு மேல் ரதவீதிகளில் வெள்ளி தேரோட்டம் நடக்கவுள்ளது.
நாளை காலை தோளுக்கினியாள் சண்முகாநதியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்வு நடக்கும். காலை 11.15 -12 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருள்வார். மாலை 4.45 மணிக்கு தைப்பூசத் தேர் வடம் பிடித்து தேரோட்டம் ரதவீதிகளில் நடக்கும். பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்றைய இரவு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/ufyd97k8/WhatsApp-Image-2025-02-09-at-09.59.07f513d9a8.jpg)
இதையொட்டி பழநிக்கு முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பழநி கோயில் அடிவாரம், கிரிவலப் பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 12 இடங்களில் தற்காலிக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.