உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!
தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா
தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தேனியில் 24 மணி நேர தா்னாவை திங்கள்கிழமை தொடங்கினா்.
தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத் தலைவா் ச.தாஜூதீன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ரவிக்குமாா், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி, செயலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுச் செயலா் பொ.அன்பழகன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பி.ராமமூா்த்தி ஆகியோா் தா்னாவைத் தொடங்கி வைத்துப் பேசினா்.
திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிகளின்படி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, ஒப்படைப்பு விடுப்பு ஆகிய உரிமைகளை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை நீதிமன்ற தீா்ப்பின்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முறைப்படுத்தி அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.