இதைச் செய்தால் விஜய் கட்சியுடன் கூட்டணி: விஜய பிரபாகரன் வைத்த செக்!
Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகுமா?
Doctor Vikatan: வாய்ப்புண் என்பது வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா... சாதாரண வாய்ப்புண்ணுக்கும் புற்றுநோய் புண்ணுக்குமான வித்தியாசங்களை எப்படிக் கண்டறிவது... கூர்மையான பற்கள் வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்துமா... வாய்ப்புண் வந்தாலே பயமாக உள்ளது. புற்றுநோய் பற்றிய பயம் அதிகமாக உள்ளது, எனக்கு புகை, மதுப் பழக்கங்கள் இல்லை. வாய்ப்புண்ணிலிருந்து மீண்டெழ வழி கூறவும்.
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-10/86e34821-bf9e-4ebc-b97e-a0246a0f4504/WhatsApp_Image_2021_06_21_at_3_22_45_PM.jpeg)
வாய்ப்புண் என்பது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா என்ற பயம், சமீபகாலமாக நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்க முடிகிறது. மவுத் அல்சர் எனப்படும் வாய்ப்புண் ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன. உங்களுக்கு வாய்ப்புண் வருவதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
அதீத ஸ்ட்ரெஸ் இருப்பது, ஹார்மோன்கள் ஏற்ற, இறக்கம், ஊட்டச்சத்துக் குறைபாடு, வானிலை மாற்றம் என வாய்ப்புண் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக, வாய்ப்புண்கள், 7 நாள்கள் முதல் 2 வாரங்களுக்குள் தாமாக குணமாகிவிடும். மருத்துவரை அணுகினால், அவர் வாய்ப்புண்களுக்குத் தடவக்கூடிய க்ரீம் அல்லது ஜெல் பரிந்துரைப்பார். அதை உபயோகித்தாலே புண் சரியாகிவிடும். அதையும் தாண்டி, வாய்ப்புண் தொடர்ந்துகொண்டே இருந்தால், பல் மருத்துவரை அணுகுங்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/pdjwdp5u/halloween-vampire-white-background1232-1664.avif)
கூர்மையான பற்கள் குத்திக்குத்தி புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவுதான். ஆனால், பற்களின் கூரிய பகுதியானது, வாயில் உள்ள மென்மையான மியூகோசல் திசுக்களின் (mucosal tissue) மேல் தொடர்ந்து பட்டுக்கொண்டே இருப்பது ஒருவகையான பாதிப்பை உருவாக்கும். உங்களுக்கு ஏற்கெனவே உடலில் வேறு ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றனவா என்று பாருங்கள். அப்படியிருந்தால், இந்தப் புண்ணானது புற்றுநோய் அல்லாத கட்டியாக மாற வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி வாய்ப்புண் வருகிறது என்றால் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.