செய்திகள் :

திருப்பரங்குன்றம்: `இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?' - சீமான் காட்டம்!

post image

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா - முருகன் கோயில் விவகாரம் அரசியலாக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் விவாதமானது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி பன்னெடுங்காலமாக வழிபாடு செய்து வரும் நிலையில் இப்போது அதனைச் சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்?

திருப்பரங்குன்றம்

இலட்சம் பேர் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வும், சித்திரைத் திருவிழாவும் சிறு சலசலப்புக்கும் இடங்கொடாவண்ணம் சமூக நல்லிணக்கத்தோடு சிறப்புற நடைபெறும் மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றி நிறுத்தியது யார்? பெரும் மதச்சிக்கலாக உருவெடுக்காவண்ணம் தடுத்து, தொடக்க நிலையிலேயே இருதரப்பையும் அழைத்து, ஒருமித்த முடிவுக்குக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுத் தராது ஊதிப் பெரிதாக்க ஆளும் தி.மு.க அரசு துணைபோனதேன்?

சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடும், மிக இயல்பாகவும் நடந்தேறி வரும் நிலையில், திடீரென காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்ததன் பின்னணி என்ன? அக்காவல்துறை அதிகாரியின் செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்காததேன்? திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் இறைச்சி உணவு சமைத்து உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை என அறிவிப்பாணை விடுவதற்குத் தயங்குவதேன்?

திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார்

கடந்த பிப்ரவரி 3 அன்று இச்சிக்கலை மையப்படுத்தி பா.ஜ.க நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அன்றைய தினமே நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று, மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது? 144 தடையுத்தரவு இடப்பட்டிருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியமானது? பா.ஜ.க-வின் கொடிகளுடன் கோயிலுக்குள் பா.ஜ.க-வினர் அத்துமீறி செல்வதற்கு எப்படி அனுமதித்தது காவல்துறை?

கோவையைப் போல, மதுரையையும் மதப்பதற்றம் மிகுந்தப் பகுதியாக மாற்றுவதற்கு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைச் சிக்கலாக மாற்ற பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சகம் நியாயத்தின் பக்கம் நிற்காது பா.ஜ.க-வின் தரப்பை வலிமைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதேன்? யார் சொல்லி இப்படி செய்கிறார் அமைச்சர் சேகர் பாபு? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா தி.மு.க?

திருப்பரங்குன்றம்

இச்சிக்கல் தொடர்பான வழக்கில், தர்காவில் இறைச்சி உணவு உண்ணுகிற பழக்கம் காலங்காலமாக இருக்கும் நடைமுறையென தி.மு.க அரசின் சார்பில் வாதிடாததேன்? மலையின் மீது ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறது? அமைதிப்பேச்சுவார்த்தையில், “ஆடு,கோழிகளைப் பலியிட்டால் மலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும்” என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். ‘சிவன் மலை’ என்கிறார் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன். தி.மு.க அரசு திட்டமிட்டு மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா?

திருப்பரங்குன்றம் மலை தர்கா சிக்கல் குறித்து விவாதிக்க மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோதும் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில்சொல்லாது முதல்வரும், அமைச்சர்களும் கடந்துபோனதேன்?

சீமான்
சீமான்

1991-ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, வழிபாட்டுத்தலம் நாட்டு விடுதலையின்போது என்ன மதத்தன்மையைக் கொண்டிருந்ததோ அதே நிலை நீடிக்கவே வழிவகை செய்கிறது. அந்தடிப்படையில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு, கோழியைப் பலியிட்டு சிக்கந்தர் தர்காவில் நடந்தேறி வரும் வழிபாட்டு முறை மீது இப்போது திடீரென தி.மு.க அரசின் அறநிலையத்துறை தடைவிதிக்க முற்படுவது சட்டவிரோதம் இல்லையா?

தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளை சரியாக வழிநடத்த வேண்டியதும், நிர்வாக மேலாண்மை செய்ய வேண்டியதும் ஆளும் தி.மு.க அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். தி.மு.க அரசின் மோசமான நிர்வாகத்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் முதல் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்கிற சிக்கல்வரை எல்லாவற்றிலும் அதிகார வர்க்கம் செயலிழந்தும், தவறான பாதையிலும் செல்கிறது. இதற்குத் முழுப்பொறுப்பு கொண்ட முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் வெறுமனே அதிகாரிகளைக் கைகாட்டித் தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பது நியாயமா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென கொக்கரித்து சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இசுலாமிய மக்களின் வழிபாட்டுரிமைக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய தி.மு.க அரசு கள்ளமௌனம் சாதிப்பதும், அறநிலையத்துறை மூலமாக எதிர்நிலைப்பாடு எடுப்பதும் பச்சைத்துரோகம் இல்லையா?" எனக் காட்டமாக பல்வேறு கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.

வேலூர்: விஐடி அருகில் குண்டும் குழியுமான சாலை... மக்களின் கோபமும் மாநகராட்சியின் விளக்கமும் என்ன?

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் விஐடி பல்கலைக்கழகத்தின் மெயின் பிளாக் கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த மெயின் பிளாக் கட்டடத்தின் அருகிலேயே இருக்கும் அரசு உள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சால... மேலும் பார்க்க

டெல்லி: பெண் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து முதல்வர் - ரேஸில் யார் யார்?

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் எனத் தேர்தல் களம் பரபரத்தது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு 70 சட்டமன்றத் தொகுதியில் 48 இடங்க... மேலும் பார்க்க

Sanskrit: `இது பாரதம்... சமஸ்கிருதம்தான் முதன்மை மொழி’ - மக்களவையில் சபாநாயகர் vs தயாநிதி மாறன்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில், நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் மக்களவையில் இன்று காரசார விவாதம் அரங்கே... மேலும் பார்க்க

`அந்த 2 சர்வேக்கள்; திராவிட கட்சிகளின் வாக்குவங்கி’ - பி.கே, விஜய் சந்திப்பும், வியூக பின்னணியும்

விஜய் - பிரசாந்த் கிஷோர்தமிழக அரசியலின் ஒட்டுமொத்த பார்வையும் பனையூரில் குவிந்திருக்கும் அளவுக்கு மாறிப்போயிருக்கிறது, தவெக தலைவர் விஜய் - ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் இடையேயான சந்திப்... மேலும் பார்க்க

`அப்செட்’ செங்கோட்டையன் - 8 ஆண்டுகள் அமைதிக்குப்பின் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி

மெளனத்தை கலைத்த செங்கோட்டையன்அ.தி.மு.க-வை வழிக்கு கொண்டுவர, பா.ஜ.க எத்தனையோ வழிமுறைகளை கையாண்டுக் கொண்டேதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இன்னமும் விடாமல் துரத்துகிறது. தொடர்ச்சியான ரெய்டு அஸ்திரங... மேலும் பார்க்க

"பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதா?" - திமுகவை சாடும் அன்புமணி

பா.ம.க தலைவர் அன்புமணி, ``பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா?" என்று ஆளும் திமுக அரசை விமர்சித்து, ``மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்." என்று வலியுறுத்தி... மேலும் பார்க்க