கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!
முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகளை விமர்சித்து பேசியுள்ளார்.
இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வந்தன. தற்போது இங்கிலாந்துடன் டி20 தொடரையும் ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது.
கடைசி ஒருநாள் போட்டியில் 44.3 ஓவர்களில் இந்திய அணி 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ரோஹித் சதமடித்து அசத்தினார். நம்.5இல் அக்ஷர் படேல் களமிறங்கி 41* ரன்கள் எடுத்தார்.
கே.எல்.ராகுலை 5ஆவது இடத்தில் களமிறக்காமல் 6ஆவது 7ஆவது இடங்களில் களமிறக்குவதை சரியான முடிவல்ல என ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
தனது சீக்கி சீக்கா யூடியூப் சேனலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியதாவது:
ஸ்ரேயாஷ் ஐயர் நல்ல ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு நல்ல விஷயம். ஆனால், நான் கே.எல்.ராகுலுக்காக வருத்தப்படுகிறேன். அக்ஷர் படேல் நன்றாக விளையாடுகிறார். ஆனால், கே.எல்.ராகுலை மாற்றி களமிறங்குவது நல்லதல்ல. ராகுல் நம்.5இல் சிறப்பாக விளையாடியுள்ளார். அதைத் தவிர்ந்த்து 6,7ஆவது இடங்களில் களமிறக்கும்போது குறைவான ரன்களில் ஆட்டமிழக்கிறார். அது சரியான முடிவல்ல.
டாப் ஆர்டர் பேட்டர்கள் நன்றாக விளையாடுவதால் இப்படி மாற்றினாலும் பிரச்னை இல்லை. ஒருநாள் தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்கும்போது கடினமான சூழ்நிலை உருவாகும். அப்போதுதான் இதன் பிரச்னை தெரியவரும்.
நீண்டநாள் செயல்திட்டத்துக்கு இது உதவாது. அதுதான் என்னை கவலை அளிக்கச் செய்கிறது எனக் கூறியுள்ளார்.