சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?
சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது.
இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. மேலும், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு தொடர்களையும் இழந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல், இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதையும் படிக்க... கம்பீர் செய்வது சரியில்லை..! முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் விமர்சனம்!
செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமான 21 வயதான ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல், நாக்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில் 64 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இருப்பினும், ஒரு காயம் காரணமாக அவர் தொடரின் மீதமுள்ள போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது இங்கிலாந்து அணிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட், 9 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 260 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 218 ரன்களும் டி20 போட்டிகளில் 196 ரன்களும் எடுத்துள்ளார். காயமடைந்த ஜேக்கப் பெத்தலுக்கு பதிலாக டாம் பான்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.