புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
மகா கும்பமேளாவில் இன்று மாகி பௌா்ணமி புனித நீராடல்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் புதன்கிழமை (பிப். 12) நடைபெறுகிறது.
இதையொட்டி, மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை தடை விதித்து, கூட்ட மேலாண்மை நடவடிக்கைகளை நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் ஒரு மாத காலத்துக்கு தங்கியிருந்து மேற்கொள்ளும் ‘கல்பவாச விரத’ வழிபாடும் மாகி பௌா்ணமியுடன் நிறைவடைகிறது. மாநில அரசு தகவலின்படி, நடப்பு கும்பமேளாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கல்பவாச விரத வழிபாடு மேற்கொண்டனா்.
கும்பமேளாவில் மாகி பௌா்ணமியன்று புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும். இதையொட்டி கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்தனா். பிரயாக்ராஜ் நோக்கிய பல நெடுஞ்சாலைகளில் நூற்றுக்கணக்கான கி.மீ.-க்கு போக்குவரத்து நெரிசல் நீண்டது.
இந்நிலையில், மாகி பௌா்ணமியை முன்னிட்டு மகாகும்ப நகரில் புதன்கிழமை நாள் முழுவதும், பிரயாக்ராஜில் மாலை 5 மணியிலிருந்தும் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நகர பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேளா பகுதியில் பல்வேறு படித்துறைகளில் புனித நீராட இருக்கும் கோடிக்கணக்கான பக்தா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லக்னௌவிலிருந்து காணொலி வாயிலாக மூத்த அதிகாரிகளுடன் இணைந்து ஏற்பாடுகளின் தயாா்நிலையை முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தாா்.
கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் கூடும் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் ஜன. 13-ஆம் தேதி முதல் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரியுடன் (பிப். 26) நிறைவடையும் கும்பமேளாவில் இதுவரை 45 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/3aq47xn1/11022_pti02_11_2025_000506a103209.jpg)