"பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதா?" - திமுகவை சாடும் அன்புமணி
பா.ம.க தலைவர் அன்புமணி, ``பற்றாக்குறையை சமாளிக்க யூனிட் ரூ.20க்கு தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதா?" என்று ஆளும் திமுக அரசை விமர்சித்து, ``மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்." என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் அன்புமணி, ``தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மின்பற்றாக்குறையைச் சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இன்றைய நிலையில் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 15,646 மெகாவாட்டாகவும். அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேர மின் தேவை 18,600 ஆக இருப்பதாகவும் மத்திய மின்சார ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச மின் தேவை 23,135 மெகாவாட்டாக இருக்கும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் நிலைமையைச் சமாளித்து விட முடியும் என்றாலும், மாலை நேர மின் தேவையைச் சமாளிக்க தனியாரிடமிருந்து தான் மின்சாரத்தை வாங்கியாக வேண்டும். சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ.20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்றும், கோடைகாலத்தில் மின்சாரத்தின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அனல்மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவு ரூ.6-க்கும் குறைவாகவே இருக்கும் நிலையில் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியிருப்பது மிகவும் கவலையளிப்பதாகவும் அந்த அதிகாரி கூறியிருப்பதாகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சியும் பல ஆண்டுகளாகக் கூறி வருகிறது. ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் குறைந்தது 75% சொந்தமாக உற்பத்தி செய்யப்பட வேண்டும். மீதமுள்ள மின்சாரம் மத்தியத் தொகுப்பில் இருந்து பெறப்பட வேண்டும்.
அப்போது தான் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டின் இப்போதைய மின் தேவை 18,600 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும் 4,320 மெகாவாட் மட்டும்தான். அதிலும் இன்று காலை 2,619 மெகாவாட் அளவுக்குதான் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2,100 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை.
வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்று வரை வணிகரீதியிலான மின்னுற்பத்தி தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சுமார் 17,000 மெகாவாட் அளவுக்கு அனல் மின் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 5, 700 மெகாவாட் அளவுக்கான அனல் மின் திட்டங்களுக்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டால் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது.
ஆனால், தங்களின் சுயநலனுக்காக அப்படி ஒரு நிலை உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதே நிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது. எனவே நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்." என்று வலியுறுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs