Sanskrit: `இது பாரதம்... சமஸ்கிருதம்தான் முதன்மை மொழி’ - மக்களவையில் சபாநாயகர் vs தயாநிதி மாறன்
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில், நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் மக்களவையில் இன்று காரசார விவாதம் அரங்கேறியிருக்கிறது.
பொதுவாக, அவையில் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உரையாற்றும்போது, மற்ற எம்.பி-க்கள் தங்களுக்கு புரியும் மொழியில் ஹெட்போன் வாயிலாக கேட்டுக்கொள்ளலாம். அதற்கான, மொழிமாற்றம் வசதி அந்த ஹெட்போனில் செய்யப்பட்டிருக்கும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/kc3k10we/Screenshot_2025_02_11_181744.png)
இந்த நிலையில், அந்த மொழிமாற்றம் வசதி சமஸ்கிருதம் உட்பட 22 மொழிகளில் கிடைக்கும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சமஸ்கிருதத்தையும் இதில் சேர்த்திருப்பது குறித்து அவையில் கேள்வியெழுப்பிய தயாநிதி மாறன், ``மாநில மொழிகளுக்கு இந்த மொழிமாற்றம் வசதி வரவேற்கிறோம். அதேவேளையில், சமஸ்கிருதம் எந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக இருக்கிறது என்பதைக் கூற முடியுமா...
தொடர்பு மொழியாகக் கூட இல்லாத சமஸ்கிருதத்துக்கு எதற்காக வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கிறீர்கள். எந்த மாநிலத்திலும் இந்த மொழி பேசப்படுவதில்லை. யாரும் இந்த மொழியை தொடர்புமொழியாகப் பயன்படுத்தவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 73,000 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள். உங்களின் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்காக வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறது." என்று கூறி அமர்ந்தார்.
The Speaker announced in Lok Sabha today that translations of proceedings is being made available in 22 languages including Sanskrit.
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) February 11, 2025
Translations, are most welcome for languages that are official state languages. Can you tell me which state has Sanskrit as its official… pic.twitter.com/QhwH78LUkP
அதற்கு, தாமாக முன்வந்து இந்தியில் பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ``எந்த நாட்டில் இருக்கிறீர்கள்... இது பாரதம். பாரதத்தின் முதன்மை மொழி எப்போதும் சமஸ்கிருதம்தான். அதனால்தான், சமஸ்கிருதம் மட்டுமல்லாது 22 மொழிகளைக் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால், எதற்காக சமஸ்கிருதத்துக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். நாடாளுமன்றத்தில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதம், இந்தி உட்பட அந்த 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் விவாதங்கள் நடக்கும்." என்று கூறினார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play