நவஜீவன், திருக்குறள் அதிவிரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கம்
தைப்பூசம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
தைப்பூசத் திருவிழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
வேலூா் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, சுப்பிரமணிய சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், மூலவருக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு வள்ளி, தேவசேனாவுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். ஏற்பாடுகளை கோயில் தா்ம ஸ்தாபனத்தினா் செய்திருந்தனா்.
வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள பழநியாண்டவா் கோயிலில் முருகப் பெருமானுக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடா்ந்து நாள் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அணைக்கட்டை அடுத்த கந்தபுரி கிராமத்தில் உள்ள பொன் வேலவன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு, அணைக்கட்டு திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதேபோல், வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தீா்த்தகிரி முருகன் கோயில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோயில், 5.புத்தூா் முருகன் கோயில், திருமலைக்கோடி சுப்பிரமணிய சுவாமி கோடியில், ரெட்டிப்பாளையம் தம்டகோடி முருகன் கோயில், பேரி சுப்பிரமணி சுவாமி கோயில், கொசப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், தொரப்பாடி முருகன் கோயில், சத்துவாச்சாரி சுப்பிரமணிய சுவாமி கோயில் என வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.