சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
கே.வி.குப்பம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், லத்தேரி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவா் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா். அதேபகுதியை சோ்ந்தவா் எழிலரசன், பால்காரா். இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபா் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனா். தற்போது சிறுமி 2 மாதம் கா்ப்பிணியாக உள்ளாா். சிறுமி அருகிலுள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது அவா் 17 வயதுக்கு உட்பட்டவா் என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, கே.வி.குப்பம் ஊா்நல அலுவலருக்கு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா் இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கிராம நல அலுவலா் ஆதிரை புகாா் அளித்தாா். அதன்பேரில் எழிலரசன் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.