Soori: "அன்று சுவர்களில் நிறங்களைப் பதித்தேன்; ஆனால் இன்று திரையில்...” - நெகிழு...
Gold: '40 நாள்களில் ரூ.7,000 உயர்ந்த தங்கம் விலை!' - காரணம் என்ன... தங்கத்தில் முதலீடு செய்யலாமா?!
2025-ம் ஆண்டு தொடங்கி 41 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. ஆனால், அதற்குள் ஒரு பவுன் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.7,000 உயர்ந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து பார்த்தால், கிட்டத்தட்ட ரூ.3,000 உயர்ந்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-03/dwkxmpa2/steptodown.com459627.jpg)
5 முக்கிய காரணங்கள்...
ஆக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு ஐந்து விஷயங்கள் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. அவை...
உலக அளவில் நடந்து வரும் போர்கள், அடுத்தடுத்து நிகழும் தாக்குதல்கள்;
பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளதால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கம் பக்கம் திருப்பியுள்ளது;
உலக அளவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை;
உலக நாடுகளின் வங்கிகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருவது;
கடைசி மற்றும் மிக முக்கியமான காரணம், வரி விதிப்பு உள்ளிட்ட அதிரடி அறிவிப்புகளை அறிவிக்கும் அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்பின் நடவடிக்கைகள்
- இந்த காரணங்களால் தான் தற்போது தங்கம் விலை தாறுமாறாக எகிறி வருகிறது.
பொருளாதார நிபுணர் என்ன சொல்கிறார்?!
விகடன் இணையதளத்தில் முதலீடு சம்பந்தமான கட்டுரை ஒன்றில் தங்கம் முதலீடு குறித்து பொருளாதார நிபுணர் பேசியிருப்பதாவது, "சந்தை நிலவரப்படி, தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை. அப்படியே குறைந்தாலும், ஓரேடியாக குறைந்துவிடாது...கொஞ்சம் தான் குறையும்.
இன்னொரு பக்கம், உலகில் உள்ள 90 சதவிகித தங்கம் வெட்டி எடுத்தாகிவிட்டது என்று தரவுகள் கூறுகின்றன. அப்படி பார்க்கையில், சப்ளைகள் குறையும்போது, தேவை அதிகரிக்கும். தேவை அதிகரிக்கும்போது விலையும் கூடும்.
மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களின் லித்தியம் பேட்டரிகளிலும் தங்கம் மற்றும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. அதனால், இப்போதே தங்கத்தின் தேவை தொடங்கிவிட்டது என்று எடுத்துகொள்ளலாம்" என்று விளக்கியுள்ளார்.
![gold](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-24/ok0amqcr/shutterstock-2480509399-2024-08-368b960cfc07a7fc6986b47f60f0159d-2048x1365.webp)
வாங்கலாமா...வேண்டாமா?
இதுவும் 'இனி தங்கம் விலை பெரியளவில் குறையாது' என்பதை தெளிவாக விளக்குகிறது. இந்த நிலையில், 'இப்போது தங்கம் வாங்கலாமா...வேண்டாமா?' என்ற கேள்வி எழும்.
இப்போது மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை அவ்வளவாக சரியாத சூழலில், சர்வதேச முதலீட்டாளர்கள் தொடங்கி சாதாரண மக்களுக்கு வரை தங்கம் தான் அறுதலாக உள்ளது.
தங்கம் ஆபரணங்களாக வேண்டும் என்பவர்கள் நகைகளாகவே வாங்கலாம். 'தேவையான அளவுக்கு நகைகள் இருக்கு' என்பவர்கள் தங்க நாணயங்கள் அல்லது தங்க கட்டிகளை வாங்கலாம்.
'பிசிக்கலாக தங்கம் வேண்டாம்' என்பவர்கள் கோல்டு இ.டி.எஃப், கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.
குறைந்துவிடுமோ?!
2027-ம் ஆண்டு, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தை தொட்டு விடும் என்று நிபுணர்கள் கூறும் சூழலில், இப்போது நாம் செய்யும் தங்கம் முதலீடு வீணாகிப்போக வாய்ப்பில்லை.
'தங்கம் விலை ஒருவேளை குறைந்துவிடுமோ?' என்ற அச்சம் பற்றி பொருளாதார நிபுணரிடம் கேட்டப்போது, "தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. அப்படியே குறைந்தாலும், ஒரேடியாக சரிந்துவிடாது" என்று பதிலளித்தார்.