NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
Comic Con: காமிக் ரசிகர்களின் திருவிழா; ஸ்பைடர் மேன், பேட் மேன், லூஃபி வேடமிட்டு அசத்திய ரசிகர்கள்!
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், மாருதி சுசூகி மற்றும் க்ரஞ்சிரோல் இணைந்து 'காமிக் கான்' எனும் இரண்டு நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
மார்வல், டிசி, அனிமே, மங்கா, காமிக்ஸ் உள்ளிட்ட தொடர்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட இந்த விழாவில் சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லா தரப்பு மக்களும் பெருந்திரளாக வந்து இந்த நிகழ்வை பார்வையிட்டனர். சமீப காலமாக சிறுவர், இளைஞர் ஆகியோர் மத்தியில் அனிமே பிரபலமாகி பரவி வருகிறது. நரூட்டோ, ஒன் பீஸ், டிமான் ஸ்லேயர், அட்டாக் ஆன் டைட்டன் உள்ளிட்ட தொடர்கள் ஆகியவற்றுக்கு தனி பட்டாளமே இங்கு உள்ளது. மார்வெல் , டிசி ஆகியவற்றுக்கு இந்தியாவில் தனி மார்கெட்டே உள்ளது. இவர்களுக்கான ஒரு திருவிழாவாக தான் இந்த காமிக் கான் நிகழ்வு நடைபெற்றது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/nrl05zbf/WhatsApp-Image-2025-02-10-at-1.33.23-PM.jpeg)
காமிக் கான் என்பது காமிக் வாசகர்களுக்காக நடத்தப்படும் நிகழ்வு. அனைத்து வித காமிக் ரசிகர்களும் ஒன்று கூடும் இந்நிகழ்வில் மொத்தம் 40-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து காமிக் கானின் நிறுவனர் ஜதின் வர்மா அவர்களிடத்தில் பேசினோம். "பாப் கலாச்சாரத்தை கொண்டாடுவது தான் இந்த காமிக் கானின் நோக்கம். அது மட்டுமல்லாமல் காமிக் என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. அதனால், அதற்கு ஒரு தளம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த காமிக் கான். எல்லா வகை, எல்லா தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் இது அமையவேண்டும் என்பதுதான் காமிக்கானின் நோக்கம்" என்றார்.
தெடர்ந்து பேசிய அவர், "சென்னை இந்தியாவின் முக்கியமான நகரம் பிரபலமான நகரமும் கூட. சென்னையில் இப்போது நடைபெற்ற காமிக் கான் நிகழ்வு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் நடப்பது இது இரண்டாவது முறை, சென்னை மக்கள் பாப் கலாச்சாரத்தை அதிகமாக வரவேற்று கொண்டாடுவதால் இனிமேல் அடுதடுத்து இங்கு காமிக் கான் நிகழ்வு நடைபெறும். இந்தளவுக்கு காமிக் ரசிகர்கள் சென்னையில் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. இந்த மகத்தான வரவேற்பு மகிழ்ச்சியளிக்க கூடியதாக உள்ளது" என தெரிவித்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/v6osndo3/WhatsApp-Image-2025-02-10-at-1.33.18-PM.jpeg)
இந்த நிகழ்வில் காமிக், அனிமே தொடர்பான புத்தகங்கள் தொடங்கி கலைப்பொருட்கள், சிறிய அளவு முதல் பெரிய அளவிலான பொம்மைகள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒன் பீஸ் சீரிஸில் வரும் லூஃபி கதாபாத்திரம் அணிந்திருக்கும் 'ஸ்ட்ரா ஹேட்' தொப்பி அதிகம் விற்பனையானது. அனிமே சீரிஸ் மட்டுமல்லாமல் கேமிங் ரசிகர்களுக்காகவும் தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. GTA, காட் ஆஃப் வார், ஸ்பைடன் மேன் கேம்கள் அதிகம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களுக்கு காஸ்பிளே போட்டியும் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்க ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த காமிக் கதாபாத்திரம் போல வேடமிட்டு வந்து கொண்டாடினர். அதிகமாக ஸ்பைடர் மேன், பேட் மேன் மற்றும் லூஃபி போன்று வேடமிட்டு வந்தனர். இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் மார்வெலின் கேப்டன் அமெரிக்கா ப்ரேவ் நீயு வல்ட் படத்துக்காக தனி அரங்கும் நிகழ்வும் நடத்தப்பட்டன. கேப்டன் அமெரிக்கா போன்று வேடமிட்டு புகைப்படங்கள் எடுத்து மார்வெல் ரசிகர்கள் கொண்டாடினர். அதே போல டிசியின் சூப்பர் மேன் படத்துக்காககவும் தனி அரங்கு அமைக்கப்பட்டிருந்தன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/s388336d/WhatsApp-Image-2025-02-10-at-1.33.13-PM.jpeg)
Board Games, விஆர் விளையாட்டுகள் என எல்லா தரப்பு மக்களும் விளையாடி கொண்டாடும் படி இந்த நிகழ்வு அமைக்கப்பட்டிருந்தது. இந்ந காமிக் கானில் மெக்மேகன், கைல் ஹிக்கிங்ஸ் உள்ளிட்ட சர்வதேச காமிக் கலைஞர்கள் பங்குபெற்று ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இது வெறும் சாதாரண நிகழ்வாக அல்லாமல் காமிக் ரசிகர்களின் திருவிழாவாக நடைபெற்று முடிந்தது.
படங்கள்: சாம் சுந்தர்