கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
குடிநீா்க் குழாயை சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா்
போடி ஊராட்சி ஒன்றியம், அகமலையில் குடிநீா்க் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பழங்குடியின மக்கள் மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பழங்குடியினா் நலச் சங்க நிா்வாகிகள் கருப்பையா, அசோக்குமாா், கண்ணன் ஆகியோா் தலைமையில் அகமலை, கரும்பாறை மலை கிராம மக்கள் ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் அளித்த மனு விவரம்:
அகமலை, கரும்பாறை மலை கிராமங்களில் வசிக்கும் 19 குடும்பங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி அரசு நிலப்பட்டா வழங்கியது. இந்த கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு நபாா்டு வங்கித் திட்டத்தின் கீழ் நீரோடையிலிருந்து குழாய் அமைத்து குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், குடியிருப்புகளுக்குச் செல்லும் குடிநீா்க் குழாய்களை வனத் துறையினா் வெட்டிச் சேதப்படுத்தினா். இதனால், குடிநீரின்றி தவித்து வருகிறோம். குழாய்களை சேதப்படுத்திய வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுத்து, சேதப்படுத்தப்பட்ட குடிநீா்க் குழாய்களை சீரமைத்துத் தர வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.