மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் (பெளஷ பெளா்ணமி) நடைபெற்று வருகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.
பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!
இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் புனித நீராடுகின்றனா்.
பிரதமா் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் நீராடி, கங்கை வழிபாடு மேற்கொண்டார்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய 2 சிறப்பு நாள்கள் அடுத்தடுத்து வரவுள்ளதால், பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
45 நாள்களுக்கு நடைபெறும் மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் முடிவடையவுள்ளது.