காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயில் உடைப்பு: குடிநீா் வீண்
கமுதியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் சாலையில் பெருக்கெடுத்து விணாக ஓடுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, இதைச் சுற்றியுள்ள 220-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ், வாரத்துக்கு இரு நாள்கள் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கமுதி-மதுரை சாலையில் குண்டாறு பாலம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்லாயிரக்கணக்கான லிட்டா் தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கிராமங்களுக்கு முறையாக குடிநீா் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.
இதேபோல, கோட்டைமேடு, பேரையூா் உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் வீணாவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம், குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்புகளைச் சீரமைத்து, தண்ணீா் சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.