செய்திகள் :

சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!

post image

கைகள், கால்களில் விலங்குகள், இரண்டையும் இணைத்து இடுப்பில் பூட்டப்பட்டு இழுத்துச் செல்லும்படியான சங்கிலி!

சுமார் 40 மணி நேர விமானப் பயணத்தில் எங்கேயும் இவை அகற்றப்படவில்லை. கழிப்பறைகளுக்குச் செல்லும்போதுகூட நீக்கப்படவில்லை. இவற்றையும் சேர்த்து இழுத்துக்கொண்டேதான் சென்றிருக்கின்றனர். சாப்பிடும்போதும் கழற்றிவிடவில்லை. எல்லாமே விலங்குகள் பூட்டிய சங்கிலிகளுடன்தான்.

‘சட்ட விரோதமாக’ குடியேறியதாக அமெரிக்காவிலிருந்து சில நாள்கள் முன் நாடு கடத்தப்பட்ட (திருப்பி அனுப்பப்பட்ட) 104 இந்தியர்களுடைய பரிதாப நிலைதான் இது! தேவைப்படாதபட்சத்தில் கொடுங்குற்றவாளிகள்கூட இவ்வாறு நடத்தப்படுவதில்லை.

அமெரிக்க ராணுவ விமானத்தில் கொண்டுவரப்பட்ட இவர்கள் அனைவரும் இந்தியாவில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கப்பட்டனர். விமானத்தில் யார் யார் வருகின்றனர் என்பதுகூட இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இப்படியொரு விமானம் இறங்கப் போகிறது என்பதே மாநில அரசுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள், கை-கால் விலங்குகள் – சங்கிலிகளுடன் நடந்துசெல்லும் விடியோவை, உலகமே அறியும்படியாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டதுடன், ‘சட்டவிரோதமான ‘ஏலியன்’களை (வேற்றுகிரகவாசிகளை) வெற்றிகரமாக இந்தியாவுக்குத் திருப்பியனுப்பிவிட்டோம்; சட்டவிரோதமாக நீங்கள் வந்தால் நீங்கள் அகற்றப்படுவீர்கள்’ என்று அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறைத் தலைவர் மிசேல் டபிள்யு பேங்க்ஸ் குறிப்பிட்டிருப்பதுதான் -­ அமெரிக்க அரசின் அல்லது அதிகாரத்தின் ஆணவ உச்சம்!

இந்தக் காட்சியைக் கண்டு நாடே கொந்தளித்த நிலையில், மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘அமெரிக்காவில் இது வழக்கமான நடைமுறைதான்; திருப்பி அனுப்பப்படுவோர் அவமதிப்பாக நடத்தப்பட மாட்டார்கள் என்பதை உறுதி செய்வதற்காக டிரம்ப் நிர்வாகத்துடன் இந்தியா பேசிக்கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.

தவிர, இவ்வாறு திருப்பி அனுப்புவதெல்லாம் புதிதல்ல என்ற அவர், 2012-லிருந்தே – கை கால்களில் விலங்கிடும் - இந்த நடைமுறை இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால், இந்தியர்கள் யாரும் இனிமேல் இவ்வாறு விலங்குகள் பூட்டப்பட மாட்டார்கள் என்பதைக்கூட அவரால் உறுதியாகக் கூற முடியவில்லை!

(இதே நாளில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியினருக்கு விலங்கு பூட்டும் வரலாற்றைக் கொண்டது; பேச்சு சுதந்திரத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சியைக் குற்றம்சாட்டிக்  கொண்டிருந்தார்).

ஜெய்சங்கர் சொன்னதையேதான் வேறு சொற்களில் மறுநாள் செய்தியாளர்களுடன் பேசிய இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரியும் தெரிவித்தார்.

‘கைவிலங்கிடுவது தவிர்க்க முடியாதது; அமெரிக்க அதிகாரிகளிடம் இந்தியா கவலையைப் பதிவு செய்திருக்கிறது. மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாதெனத் தொடர்ந்து அமெரிக்காவிடம் வலியுறுத்துவோம்’ என்ற மிஸ்ரி, கொலம்பியாவைப் போல, பிரேசிலைப் போல கைவிலங்கிடுவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்ததா? என்ற நேரடியான கேள்விக்கு, ‘அமெரிக்காவுடன் தொடர்பில் இருக்கிறோம்; கவலையைப் பதிவு செய்துள்ளோம்’ என்று மட்டும் பதிலளித்துள்ளார்.

எப்படியாவது காங்கிரஸையும் இதற்குள் கோத்துவிட வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல. 2012 முதல் இருக்கும் இந்த நடைமுறை பற்றி அப்போதைய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதா என்று ஒருவர் கேள்வி எழுப்ப, அத்தகைய பதிவுகள் எதுவுமில்லை என்று முடித்திருக்கிறார் மிஸ்ரி (நல்லவேளையாக ஜவாஹர்லால் நேரு காலத்தைப் பற்றி யாரும் கேட்கவில்லை!).

அதிபராக டிரம்ப் பதவியேற்ற மூன்றே வாரங்களில் அமெரிக்காவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதே இரு நாடுகளிடையிலான நட்புறவைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் விக்ரம் மிஸ்ரி.

ஆனால், சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் அமெரிக்கா திருப்பி அனுப்புவது அனேகமாக இதுவே முதல் முறை! முன்பெல்லாம் தனி விமானத்தில்தான் அனுப்பிவைக்கப்படுவார்கள்.

இதுபோலவேதான், கடந்த வாரத்தில் கொலம்பியாவுக்கு இரு ராணுவ விமானங்களில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அமெரிக்கா திருப்பியனுப்பியது; ஆனால், இந்த விமானங்களைத் தரையிறக்க அனுமதி மறுத்துத் திருப்பியனுப்பிவிட்டார் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ. கொலம்பியர்களை கிரிமினல்களைப் போல அமெரிக்க நடத்துகிறது; மனித உரிமைகளை மதிக்காமல், மரியாதையின்றி நடத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, கடும் பொருளாதார அச்சுறுத்தல்கள் மூலம் கொலம்பியாவுக்கு நெருக்கடிகளைத் தந்த்து அமெரிக்க நிர்வாகம். தொடர்ந்து, இரு நாடுகளிடைய உடன்பாடு எட்டப்பட்டதாகவும் பின்னர் அறிவித்தது. பின்னர், ராணுவ விமானங்களிலேயே கொலம்பியர்கள் அனுப்பப்பட்டதாகவும் விமானங்களை அனுப்பி அவர்களை கொலம்பியா அழைத்துக்கொண்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன – இத்தனைக்கும் நேட்டோ பட்டியலில் இடம் பெறாத, அமெரிக்காவின் நட்பு நாடுதான் கொலம்பியா!

மேலும் சில இடதுசாரி லத்தீன் அமெரிக்க நாடுகளும் ராணுவ விமானங்களில் – கை கால்களில் விலங்கு – சங்கிலிகள் பூட்டி - தங்கள் நாடுகளைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை ஏற்க மறுக்கின்றன. மெக்சிகோவும் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் பயணிகள் விமானத்தில் மட்டுமே திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பிரேசிலும் இவ்விஷயத்தில் அதிருப்தி தெரிவித்துள்ளது.

குவாதமாலா, ஹோண்டுராஸ், ஈகுவடார், பெரு ஆகிய நாடுகள் மட்டுமே ராணுவ விமானத்தில் குடியேறிகள் திருப்பி அனுப்பப்படுவதை ஒப்புக்கொண்டுள்ளன.

பெட்ரோ - மோடி - கிளாடியா

இரண்டு:

புதிதாகப் பொறுப்பேற்றதும் வெளியிட்ட கொள்கைப் பிரகடனப்படி, மெக்சிகோ, கனடா, சீனா ஆகிய நாடுகளின் மீது கூடுதலான வரிகளை விதித்தது டிரம்ப் அரசு. உடனே, பதிலடி நடவடிக்கையாக, கனடாவும் அமெரிக்கா (பொருள்கள்) மீதான வரிகளைப் பல மடங்கு உயர்த்தியது. சீனாவும் அமெரிக்க பொருள்கள் மீதான வரிகளை உயர்த்தியுள்ளது. மெக்சிகோவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருகிறது.

கூடுதல் வரிவிதிப்பு தொடர்பாக கடும் எதிர்ப்புத் தெரிவித்த மெக்சிகோ அதிபரான கிளாடியா சென்பாம் (என்ற பெண்மணி), ‘அமெரிக்கா மட்டும் அல்ல; அது இல்லாமலும் உலகம் இருக்கிறது; உங்கள் பொருள்களை எல்லாம் நுகர்வோரான நாங்கள் புறக்கணித்தால் அமெரிக்க பொருளாதாரம் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்’ என்று விலாவாரியாக டிரம்பை அதிரடித்திருக்கிறார்.

இந்த நிலையில், மெக்சிகோ, கனடா ஆகியவற்றின் மீதான வரிகள் உயர்வை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைத்துள்ளது அமெரிக்க அரசு.

ஆனால், இந்தியா?

இருநாள் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப்  பிரதமர் நரேந்திர மோடி செல்வதற்கு முன்னதாகவே, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்பட சுமார் 30-க்கும் மேற்பட்டவற்றின் மீதான வரிகளைக் குறைக்கத் திட்டமிட்டிருக்கிறது இந்திய அரசு (அதாவது டிரம்ப் நிர்வாகம் சொல்வதற்கும் வற்புறுத்துவதற்கும் முன்னதாகவே!).

சிலவற்றுக்கு 150 சதவிகிதம் விதிக்கப்பட்டிருந்த வரி, இனி 70 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. இதேபோல, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்  மேலும் பல பொருள்களின் மீதான வரிகளும் குறைக்கப்படுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின் முதன்முறையாக, டியர் ஃபிரண்ட் டிரம்ப்! என்று அழைத்துதான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் எனச் செய்திகள் வெளியாகின.

இப்போது அமெரிக்கா செல்லும் மோடி, அதிபர் டிரம்ப்பையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

விரைவில் மேலும் 487 இந்தியர்களை நாடு கடத்துவதற்கான இறுதி உத்தரவை அமெரிக்க அதிகாரிகள் பிறப்பித்துள்ள நிலையில், அவர்களையேனும் கிரிமினல்களைப் போல கை கால்களில் விலங்கிட்டுச் சங்கிலியால் பிணைத்து ராணுவ விமானத்தில் கொண்டுவந்து இறக்கிவிடாமல் இருப்பதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துவிட்டுத் திரும்புவார் பிரதமர் மோடி என எதிர்பார்ப்போம்!

தகவலுக்கு… மக்கள்தொகை: கொலம்பியா – 5 கோடி, மெக்சிகோ - 13 கோடி, இந்தியா – 142 கோடி!

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்

சொல்லப் போனால்... பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்

பிரதமர் நரேந்திர மோடி அரசின் மூன்றாம் ஆட்சிக் காலத்தின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை - பட்ஜெட்டை - பிப். 1, சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். நிர்மல... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஓ ரசிக்கும் சீமானே, ஜொலிக்கும் உடையணிந்து...

காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசை அமைத்து முதன்முதலாக காங்கிரஸ் அல்லாத முதல்வராகப் பொறுப்பேற்றவர் அண்ணா.முதல்வராக அண்ணா பொறுப்பேற்ற பின் முதன்முதலில் அ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் குறிவைக்கும் இலக்கு!

கே.விஜயபாஸ்கர்ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ள நிலையில் இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் தமிழர் க... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... டிரம்ப்பின் நாடு பிடிக்கும் அதிரடித் திட்டம்!

அமெரிக்காவின் 51-வது மாகாணமாகலாம் கனடா, கிரீன்லாந்து தேவைப்படுகிறது என்றெல்லாம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசும்போது, இவர் எப்போதும்போல தடாலடியாகப் பேசிக்கொண்டிருப்பார், அவ்... மேலும் பார்க்க