பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
கோவையில் பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, மரக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆயிஷம்மாள் (73). இவா் மதுக்கரையில் இருந்து டவுன்ஹாலுக்கு நகரப் பேருந்தில் அண்மையில் பயணித்துள்ளாா். அப்போது, அவரது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி திருடுபோனது. இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் ஆயிஷம்மாள் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இதேபோல, கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த வசந்தா என்பவா் சரவணம்பட்டிக்கு பேருந்தில் சென்றபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடா்பாக தனிப் படை அமைத்து விசாரணை நடத்த உதவி ஆணையா் சரவணக்குமாா் உத்தரவிட்டாா். இதையடுத்து, மாநகரின் முக்கியப் பகுதிகளை தனிப் படையினா் கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 2 பெண்களைப் பிடித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரித்தனா்.
இதில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த நந்தினி (28), காளீஸ்வரி (28) என்பதும், உறவினா்களான இவருவரும் ஆயிஷம்மாள், வசந்தா ஆகியோரிடம் தங்கச் சங்கிலியைப் பறித்தவா்கள் என்பதும், கோயில் திருவிழா, பேருந்துகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 11 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.