தெலுங்கு நடிகருடன் இணையும் இயக்குநர் மணிரத்னம்!
இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கி கடைசியாக இரு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த நிலையில், தனது அடுத்த படமாக நடிகர் கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தை இயக்கவிருப்பதாக மணிரத்னம் அறிவித்தார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படமாகக் கருதப்படும் நாயகன் படத்திற்குப் பின்னர் இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | கெத்தாகக் கலக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்? டிராகன் - திரை விமர்சனம்!
இந்தப் படத்தில் சிம்பு, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தக் லைஃப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்தாண்டு ஜூன் 5 ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தக் லைஃப் படத்திற்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னம் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியை கதாநாயகனாக வைத்து காதல் கதை ஒன்றை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் நவீன் பொலிஷெட்டி தெலுங்கில் ஜதி ரத்னலு, ஏஜண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஆகிய வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானார். இவரை தனது அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவைக்க இயக்குநர் மணிரத்னம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
தக் லைஃப் படம் வெளியானதும் நவீன் பொலிஷெட்டி நடிக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.