`சமூக வலைதளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்கள்... Sadist அரசு!' - ஸ்டாலின்...
`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்
நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.
அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்ந்துக்கொண்டனர். அதில் இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரி ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.
இந்தியா குறித்து ட்ரம்ப் பேசும்போது, "இந்தியாவில் இவருக்கு (எலான் மஸ்க்கிற்கு) கார் விற்பது மிகவும் கடினம். இது உண்மையா... இல்லையா என்பது தெரியாது. ஆனால், அப்படி தான் என்று நினைக்கிறேன்" என்று ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போது, எலான் மஸ்க் இடைமறித்து, "இந்தியாவில் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கப்படுகிறது" என்று கூறினார்.

இந்தியாவில் எலான் மஸ்க் தொழிற்சாலை தொடங்குவது சம்பந்தமாக ட்ரம்ப் பேசும்போது, "எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்குவது 'ஓகே' தான்... ஆனால், அது அமெரிக்காவிற்கு 'நியாயமற்றது' ஆகும்" என்றார்.
"நான் இந்தியா பிரதமர் மோடியிடம் சொல்லியிருக்கிறேன். நீங்கள் இதை செய்கிறீர்கள்... நாங்களும் உங்களுடன் மிக நியாயமாக இருக்கப்போகிறோம்" என்று கூறினார்.
இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரி 36 சதவிகிதமா என்று நேர்காணல் செய்த சீன் ஹன்னிட்டி கேட்கும்போது, எலான் மஸ்க், 'இல்லை... இல்லை... வாகன இறக்குமதிக்கு இந்தியா 100 சதவிகித வரி விதிக்கிறது" என்று பதிலளித்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கிற்கு நல்ல நட்பு நிலவி வருகிறது. தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதில் மஸ்க்கின் பங்கு கணிசமாக உள்ளது. இப்போது இந்த நேர்காணலில் இந்தியாவில் எலான் மஸ்க் தொழிற்சாலை தொடங்குவதற்கு ட்ரம்ப் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்கினால், அதில் இந்திய பொருளாதாரத்திற்கு குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டுவரும். ட்ரம்ப்பின் அதிருப்தி எலான் மஸ்க்கின் முடிவை மாற்றுமா... அல்லது என்னவாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!