பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
விரைவில் குத்தம்பாக்கம் பேருந்து முனையம்! மூடப்படுகிறதா பூவிருந்தமல்லி பேருந்து நிலையம்?
சென்னையில் ஊரகப் பகுதிகளுடனான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையின் உள்பகுதிகளில் ஏற்படும் வாகன நெரிசலைத் தவிா்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும் புதிய பேருந்து முனையங்கள் அவசியமாகின்றன.
அதன்படி, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் புதிய புறநகா் பேருந்து முனையங்கள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்தநிலையில்தான், குத்தம்பாக்கம் பேருந்து முனையம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த குத்தம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்டதும், ஏற்கனவே கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வரும் பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் 150 பேருந்துகளையும் குத்தம்பாக்கத்திலிருந்து இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்க ரூ.336 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த புதிய முனையம் பூவிருந்தமல்லியிலிருந்து 8.5 கிலோ மீட்டர் தொலைவிலும், கோயம்பேட்டிலிருந்து 23.5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இப்பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வரும்போது சேலம், தருமபுரி, ஓசூா், பெங்களூா், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அதிகளவில் இங்கிருந்து இயக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதோடு, சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீா்வாகவும் இது அமையும் என்பதால், பணிகளை விரைவில் முடிக்க முதல்வா் உத்தரவிட்டிருந்தார்.
இப்பேருந்து நிலையத்தில் 41 கடைகளும், ஆம்னி பேருந்துகளுக்கு உண்டான பயணச்சீட்டு மையம் ஆகியவைகளுக்காக 8 கடைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக சுகாதார வளாகம், சாய்வு தளங்கள், ஓய்வு எடுக்க ஓய்வு அறைகள், திருநங்கைகளுக்கான சுகாதார வளாகம், உணவகங்கள், பாலூட்டும் அறைகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
அதோடு 1,811 இருசக்கர வாகனங்கள், 234 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாநில அளவில் முழுமையாக குளிரூட்டப்பட்ட ஒரு பேருந்து முனையமாக குத்தம்பாக்கம் அமைய உள்ளது. வரும் மாா்ச் மாததில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.
தற்போது பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு பல்வேறு பகுதிகளுக்கும் 1,000 பேருந்துகள் வருவரும், 1,000 பேருந்துகள் புறப்படுவதுமாக உள்ளது. இவை அனைத்தும் குத்தம்பாக்கத்துக்கு மாற்றப்படுவதோடு, குத்தம்பாக்கத்திலிருந்து கூடுதலாக 10 புதிய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படவிருக்கிறது.
இங்கிருந்து, 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் திருநின்றவூர் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையிலும் பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது.
பூவிருந்தமல்லி பேருந்து நிலையப் பகுதி, மின்சாரப் பேருந்துகளை பழுதுநீக்கும் மற்றும் பராமரிக்கும் பகுதியாக மாற்றப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.