தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள்...
இந்திரா காந்தி தலைமையில் மூன்றாவது சக்தியாக உருவான அணிசாரா நாடுகள் இயக்கம்!
அணு ஆயுதங்களை எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த மாட்டோம் அல்லது பயன்படுத்துவதாக அச்சுறுத்த மாட்டோம் என்று அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.
1983 ஆம் ஆண்டு இதே நாள்களில்தான் – மார்ச் 7, 8 தேதிகளில் – புது தில்லியில் உலகின் 100 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஏழாவது அணிசாரா நாடுகள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஆறாவது மாநாட்டின் தலைவராக இருந்த கியூப அதிபர் பிடல் காஸ்ரோவிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றார் இந்திரா காந்தி. இந்தியாவும் இந்திரா காந்தியும் தலைமையேற்றிருந்த இந்தப் பதிற்றாண்டில் உலகில் அணிசாரா நாடுகள் அமைப்பு தனிச் செல்வாக்கு மிக்கதாகத் திகழ்ந்தது எனலாம்.
அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இரு பெரும் ஆற்றல்களாகப் பிரிந்து மோதிக் கொண்டிருந்த – இந்தப் பனிப் போர்க் காலத்தில் – தவிர்க்க முடியாத வலுவான மூன்றாவது சக்தியாக உருவெடுத்தது அணிசாரா இயக்கம்.
தில்லியில் நடைபெற்ற அணிசாரா நாடுகள் மாநாட்டைப் புதிய தலைவரான பிரதமர் இந்திரா காந்தி தொடக்கிவைத்துப் பேசினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த உரையின் முக்கியமான சில பகுதிகள் இங்கே:
“அனைத்து வகையான அணு ஆயுத சோதனைகளையும் அணுகுண்டு உற்பத்தியையும் அணு ஆயுதங்களைச் செலுத்தும் ஏற்பாடுகளையும் அணுசக்தி நாடுகள் தாற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும். படைக்குறைப்பு தொடர்பான பேச்சுகளை ஓர் உடன்பாடு காணும் உறுதிப்பாட்டுடன் மீண்டும் தொடக்க வேண்டும்.
“அணு ஆயுதம் வைத்திராத நாடுகளான நாம் அணுசக்தியை சமாதானப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த விரும்புகிறோம். உலகில் நமக்கும் வாழும் உரிமை இருக்கிறது. நமது கருத்துகளையும் மற்றவர்கள் கேட்க வேண்டும்.
ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் காணப்படும் பல வகையான ‘பகிரங்கமான அல்லது மறைமுகமான’ தலையீடுகள் கண்டனத்துக்குரியவை.
“இந்தத் தலையீடுகள் அனைத்தும் சகிக்க முடியாதவை; ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒரு தலையீடு சம்பவத்தைக் கண்டிப்பதும் மற்றொரு சம்பவத்தை மன்னிப்பதும் தவறாகும். ஒவ்வொரு நிலைமைக்கும் மூலகாரணம் இருக்கிறது. எனவே, இத்தகைய குறுக்கீடுகளுக்கு அரசியல்ரீதியாக அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.
“வெறும் பொருளாதார பலவீனம் மட்டுமின்றி நமது இயக்கத்திலேயே காணப்படும் கருத்து வேறுபாடுகள், ‘இணக்கமற்ற தன்மை’ போன்றவையும் இத்தகைய தலையீடுகளுக்கு வழிவகுத்து வருகின்றன. அணிசாரா இயக்க நாடுகள் இயக்கம் பரஸ்பர விரோத்த்தைத் தூண்டும் சச்சரவுகளில் சிக்கிக்கொள்ளாமல் ஒற்றுமையை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
“இஸ்ரேலின் அப்பட்டமான ஆக்கிரமிப்பையும் சர்வதேச சட்டத்தை அந்த நாடு தயங்காமல் மீறும் போக்கும் கண்டனத்துக்குரியவை. பாலஸ்தீனர்களின் தாயகம் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமைகளை எவ்வளவு காலத்துக்கு இஸ்ரேலால் தடுத்துக்கொண்டேயிருக்க முடியும்?
“ஆப்கானிஸ்தானில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்.
“தென் ஆப்பிரிக்காவின் இனவெறி வெள்ளையர் அரசின் இன ஒதுக்கல் கொள்கை கண்டனத்துக்குரியது. இதன் மூலம் தனது மக்கள் மீதே அந்த அரசு ஆக்கிரமிப்பு நடத்தியுள்ளது. நமீபியா மற்றும் அருகிலுள்ள பிற ஆப்பிரிக்க நாடுகள் மீது தென் ஆப்பிரிக்க நடத்தும் வன்முறைத் தாக்குதல்கள் கண்டனத்துக்குரியவை.
“இந்து மகா சமுத்திரப் பகுதியில் முனைப்பாக ராணுவ தளங்கள் அமைக்கப்படுவதும் டீகோ கார்சியா தீவிலுள்ள ராணுவ தளத்தை அணு ஆயுத தளமாக்குவதும் கண்டனத்துக்குரியவை.
“உலகின் சமாதானத்தில் அணிசாரா நாடுகளுக்குப் பெரும் பங்கிருக்கிறது. உலகின் பெரும் பிரச்சினைகள் பற்றிக் கூட்டாகப் பரிசீலிக்க 38-வது ஐ.நா. பேரவைக் கூட்டத்தில் அனைத்து நாடுகளின் அரசுத் தலைவர்களும் பங்குபெற வேண்டும்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி அடுத்த ஆண்டில் இந்து மாக்கடல் பற்றிய ஐ.நா. மாநாட்டை நடத்தும் முயற்சிகளைத் தீவிரமாக்க வேண்டும். இந்து மாக்கடல் அமைதி மண்டலமாக மாற வேண்டும்” என்றார் இந்திரா காந்தி.
மரபுக்கு மாறாக ஈரான், இராக் போர் பற்றி...
ஈரானும் இராக்கும் நடத்திக்கொண்டிருக்கும் வேதனைக்குரிய போரை நிறுத்த வேண்டும் என்றும் மாநாட்டில் இந்திரா காந்தி அழைப்பு விடுத்தார்.
இந்த அமைப்பில் [அணிசாரா நாடுகள் இயக்கத்தில்] இருதரப்பு சச்சரவுகளைக் குறிப்பிடும் வழக்கம் இல்லாத நிலையில், மாறாக முதன்முறையாக இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்தபோது, மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர்.
இந்த இரு நாடுகளுடனும் இந்தியா உண்மையான நட்புறவு கொண்டிருப்பதாலும் பலருடைய கோரிக்கைகளையொட்டியும்தான் மரபையும் மீறி தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அப்போது தெரிவித்தார் இந்திரா காந்தி.
மூன்று அம்சத் திட்டம்
பொருளாதார சமத்துவம் ஏற்படாமல் சமாதானம் நிலைத்திராது என்று குறிப்பிட்டு, உலக பொருளாதாரம் சீரடையவும், 1930 ஆம் ஆண்டையொட்டி நேரிட்ட மாபெரும் மந்த நிலையைவிட மோசமான ஒரு மந்த நிலை மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமான மூன்று அம்சத் திட்டம் ஒன்றையும் மாநாட்டில் இந்திரா காந்தி வெளியிட்டார்.
“ஒரு புதிய பொருளாதார ஏற்பாட்டைக் கொண்டுவரக் கூடிய வகையில் சர்வதேச பொருளாதார முறைமையை ஜனநாயக ரீதியில் மாற்றியமைக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளைச் சாராத வகையில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தி அதில் உணவு, எரிசக்தி, தொழில் வளர்ச்சிக்கான வளங்களைத் திரட்டும் நிதி வசதிகளை ஆராய வேண்டும். வளரும் நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரித்துக் கூட்டாக தற்சார்பு நிலையை உருவாக்க வேண்டும்.
“கடந்த 4 ஆண்டுகளாக உலகப் பொருளாதார நிலை தேக்கமடைந்துள்ளது. உற்பத்தியும் வர்த்தகமும் 1.2 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் விலை உயர்வு, வட்டி விகித அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றில் சிக்கித் திணறுகின்றன. வளரும் நாடுகளோ அதைவிட மோசமாக இருக்கின்றன.
“வளரும் நாடுகளைப் பொருத்தவரை அவை திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை கோடிக்கணக்கான டாலர்கள் ஆகும். கடந்த இரு ஆண்டுகளில் அவற்றின் ஏற்றுமதி வருவாயும் மிகவும் குறைந்துவிட்டது. கடன் சுமை காரணமாக வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதால் கடன் தொடர்பாக முக்கிய சீரமைப்புகள் அவசியம்” என்றார் அணிசாரா நாடுகள் அமைப்பின் தலைவரும் இந்தியப் பிரதமருமான இந்திரா காந்தி.
இந்த மாநாட்டில் இந்திரா காந்தியைச் சிறப்பிக்கும் வகையில், அவருடைய உரையை மாநாட்டின் செயல்முறைக்கான ஆவணமாக மாற்றுவதென்று பலத்த கரவொலிக்கு இடையே முடிவெடுக்கப்பட்டது.
அமைப்பின் புதிய தலைவராக இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவித்ததும் பிரதிநிதிகள் பகுதியில் அமர்ந்திருந்த இந்திரா காந்தி மேடையேறினார். தலைவர் இருக்கையில் அமரச் செய்வதற்காக காஸ்ட்ரோ எழுந்து நின்றார். அமருமுன் கைகுலுக்குவதற்காக இந்திரா காந்தி கைநீட்டினார். ஆனால், சிறிது நேரம் புன்முறுவல் பூத்தபடி நின்ற காஸ்ட்ரோ, பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் இந்திரா காந்தியை அரவணைத்து வாழ்த்தினார். இந்தக் காட்சியைக் கண்டதும் மாநாட்டு மண்டபமே அதிரும்படியாக அனைவரும் கரவொலி எழுப்பினர்.
[மார்ச் 8 - உலக மகளிர் நாள்]