47 ஆண்டுகளுக்குப் பின் திருச்சி - யாழ்ப்பாணம் இடையே இன்றுமுதல் விமான சேவை!
பாங்காக்: நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்... 43 பேரின் கதி என்ன?
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், அதில் சிக்கியிருந்த 43 பேரை மீட்புப் பணியினர் தேடி வருகின்றனர்.
மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மியான்மரின் சாகெய்ங் நகரின் வடமேற்கில் 16 கி.மீ தொலைவில் மதியம் 12.50 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
பூமியின் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்டு 12 நிமிடங்களில் சாகெய்ங் நகரின் தெற்கே 18 கி.மீ தொலைவில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு, கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
மியான்மரின் டௌங்கோ நகரில் தொழுகை நடைபெற்றபோது மசூதி இடிந்து விழுந்ததால் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
பாங்காக் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள்
மியான்மரைப் போலவே தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாங்காக்கில் சில பகுதிகளில் ரயில், மெட்ரோ சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாங்காக் நகரில் பல பகுதிகள் மோசமாக பாதிப்படைந்து வடக்குப் பகுதியில் கட்டப்பட்டு வந்த அரசின் 30 மாடி அலுவலகக் கட்டடம் சில நொடிகளில் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அந்தக் கட்டடத்தில் 43 பேர் சிக்கியிருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களின் நிலைமை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
ஒருவர் பலியானதாகவும் 7 பேர் வரை தப்பித்ததாகவும் கூறப்படும் நிலையில் மீட்புப் பணியினர் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
30 மாடி கட்டடம் இடிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்: பிரதமர் மோடி கவலை!
இந்த நிலநடுக்கம் சீனா, வங்கதேசம், இந்தியா உள்பட பல பகுதிகளில் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.