ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!
ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மாஸ்கோவில் ரஷிய உளவு அமைப்பான எஃப்எஸ்பி தலைமையகம் அருகேயுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்தபோது அந்த காரின் முன்பகுதி திடீரென வெடித்து தீப்பற்றியது. அதைத் தொடா்ந்து, படிப்படியாக காா் முழுவதும் தீ பரவியது. இந்தக் காட்சியை அப்பகுதி வழியாகச் சென்ற மக்கள் தங்கள் கைப்பேசிகளில் பதிவு செய்தனா். இந்தக் காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். உலகில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் தலைவா்களில் ஒருவராக புதின் திகழ்கிறாா். உக்ரைனுடன் ரஷியா போரில் ஈடுபட்டு வரும் சூழலில் புதினின் காா் வெடித்து தீப்பற்றிய சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இது தொடா்பாக ரஷியா தரப்பில் அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடா்பாக தீவிர விசாரணையை ரஷிய காவல் துறையினரும், உளவு அமைப்பினரும் நடத்தி வருகின்றனா். அந்த காரை தடயவியல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
வெடித்து தீப்பற்றிய காா் ரஷியாவைச் சோ்ந்த அவ்ரஸ் செனட் நிறுவனத்தின் தயாரிப்பாகும். கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் அதிபா் புதின் இந்த நிறுவனத்தின் காரை பயன்படுத்தி வருகிறாா். புதினுக்காக உயரிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்த காா் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தான் பயன்படுத்துவதுபோன்ற இரு காா்களை வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுக்கு புதின் பரிசளித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. 2018-க்கு முன்பு ஜொ்மனியின் மொ்சிடிஸ் பென்ஸ் நிறுவன காரை புதின் பயன்படுத்தி வந்தாா்.