வடக்கு காஸா மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலின் ஸ்தெரோத் நகரத்தின் மீதும் அதன் அருகிலுள்ள விவசாயப் பகுதிகளான ஒர் ஹானெர், இபிம் மற்றும் கெவிம் ஆகிய இடங்களின் மீதும் இன்று (எப்.1) காலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதனை தாங்கள் தகர்த்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவப் படைகள் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் அப்பகுதி முழுவதும் அபாய ஒலி எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காஸாவின் வடக்குப் பகுதிகளிலுள்ள பெயித் ஹனோன், பெயித் லஹியா மற்றும் ஷேக் ஜயித் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி காஸா நகரத்திலுள்ள கூராங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவப் படையின் அரேபிக் செய்தி தொடர்பாளர் அவிசய் அட்ராயி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாக்குதலுக்கு முன்பு இது தான் கடைசி எச்சரிக்கை என்றும் தீவிரவாத அமைப்புகள் மக்கள் குடியிருப்பிலிருந்து ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காஸா அருகிலுள்ள இஸ்ரேல் பகுதிகளின் மீதான ஹமாஸ் படைகளின் தாக்குதலில் 1,180 பேர் கொல்லப்பட்டதுடன் 252 இஸ்ரேலியர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஹமாஸிடம் மீதமுள்ள 59 பிணைக் கைதிகளில் 23 பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க:மியான்மர் நிலநடுக்கம்: 35 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய பாகிஸ்தான்!