அமெரிக்காவின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் யேமன் நகரங்கள்!
யேமன் நாட்டின் மீது அமெரிக்கா தொடர் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படை தெரிவித்துள்ளது.
யேமனின் வடக்கு சனா மற்றும் சதா மாகாணங்களின் மீது அமெரிக்க கடந்த சில மணி நேரங்களில் மட்டும் 22 முறை வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படையின் தொலைக்காட்சியில் இன்று (ஏப்.1) கூறப்பட்டுள்ளது.
இத்துடன், யேமனின் மத்திய மாகாணமான மரிபில் அமெரிக்காவின் எம்.க்யூ. 9 டிரோனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு சனா மாகாணத்தின் சன்ஹன் மாவட்டத்தின் ஜர்பான் பகுதியில் 5 முறையும் பனி மட்டார் மாவட்டத்தில் 2 முறையும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகவும், ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள சதா மாகாணம் நேற்று (மார்ச் 31) நள்ளிரவில் மட்டும் 15 முறை தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களினால் உண்டான பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் நேற்று (மார்ச்31) ஹஜ்ஜார் மாகாணத்தின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் ஒரு குழந்தை படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றது.
முன்னதாக, போர் ஒப்பந்தத்தை முறித்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்துள்ளது. இதனால், இஸ்ரேல் மீதும் அமெரிக்க கடற்படை மற்றும் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீதும் ஹவுதி படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்தத் தாக்குதல்களினால் கடந்த மார்ச் 15 முதல் யேமன் மீதான வான்வழித் தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்துள்ளது. மேலும், ஹவுதி கிளர்ச்சிப்படையினால் அமெரிக்க கப்பல்களுக்கு உண்டாகும் அச்சுறுத்தல் முடிவுப்பெறும் வரை யேமன் மீதான தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (மார்ச் 31) தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வெளியேறிய 8.79 லட்சம் ஆப்கன் மக்கள்! எஞ்சியவர்களை நாடு கடத்தும் பாகிஸ்தான்!