வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!
அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு அந்நாட்டுடன் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டன. பின்னர், டிரம்ப் தனது முதல் ஆட்சிக்காலத்தில் (2017 -21) அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தார்.
மேலும், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்ததால் டிரம்ப் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டார்.
ஈரான் யுரேனியம் செறிவூட்டலின் மூலம் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதைப் பலமுறை மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. ஆனால், தனது அணுசக்தி திட்டங்கள் முழுவதும் உள்நாட்டு எரிசக்தி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக ஈரான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், டிரம்ப் மீண்டும் பதவியேற்றபின் அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான கடுமையான வரம்புகள் கொண்ட புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது.
ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரிப்பதாகக் கூறினார். ஈரான் நாட்டின் தலைவரான அயதுல்லா அலி கமேனிக்கு டொனால்ட் டிரம்ப் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்த பதிலை அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ஒரு நேர்காணலில் பேசியபோது, “ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும். இந்தத் தாக்குதல் இதுவரை அவர்கள் பார்த்திராத வகையில் இருக்கும்.
அதுமட்டுமின்றி, 4 ஆண்டுகளுக்கு முன்னர் செய்ததைப் போல அவர்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.