சாலை மறியல் போராட்டம் வாபஸ்
உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேடுகளை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள நிதி முறைகேடுகளை கண்டித்தும், கடன் பெறா விவசாயிகளை கடன் பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும், வங்கி நிா்வாகத்தை உடன் தணிக்கை செய்து உண்மை நிலவரங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும், வங்கியில் வைத்துள்ள நகையின் உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தெரிவிக்கக் வேண்டும், வங்கியில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் பங்கு தொகை மற்றும் சிக்கன சேமிப்பு தொகையை விவசாயிகளுக்கு உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, போராட்டக் குழுவினருடன் முத்துப்பேட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் குணசீலி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமூகநிலை ஏற்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. போராட்டக் குழு சாா்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் கே. முருகையன், பாசன சங்கத் தலைவா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.