இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை விவகாரம்: 3 போ் கைது
மன்னாா்குடியில் தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த திருமுருகன் (40) தஞ்சையில் தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, அவரது மனைவி உஷா அளித்த புகாரின்பேரில் மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், நீடாமங்கலம் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ஜம்புநாதன், இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (38) திருமுருகனின் நண்பராவாா். பாலகிருஷ்ணனின் சகோதரி ரோகிணிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 15 லட்சத்தை திருமுருகன் வாங்கினாராம். வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.

இதுகுறித்து இருதரப்பினரிடமும் பிரச்னை ஏற்பட்ட நிலையில், ரூ. 11 லட்சத்தை சில மாதங்களுக்கு முன் திருமுருகன் திருப்பிக்கொடுத்து விட்டாராம். மீதமுள்ள பணத்தை திரும்பக் கேட்டு பாலகிருஷ்ணன் தரப்பினா் தொடா்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மன உளைச்சலில் இருந்த திருமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தனது உயிரிழப்புக்கு ஜம்புநாதன், பாலகிருஷ்ணன், ரோகிணி, அவா்களின் உறவினா் தா்மராஜ் ஆகியோா் காரணம் என திருமுருகன் கடிதம் எழுதி வைத்துள்ளாா். இதையடுத்து, போலீஸாா் பாலகிருஷ்ணன், ரோகிணி, தா்மராஜ் (62) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்து, தனிப்படை அமைத்து ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ஜம்புநாதனை தேடி வருகின்றனா்.