தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய ...
துவாரகாவில் உள்ள கேரேஜில் தீ விபத்து: 11 காா்கள் எரிந்து நாசம்
தில்லி துவாரகா செக்டாா் 24- இல் உள்ள காா்கள் நிறுத்திவைக்கப்படும் கட்டடத்தில் (கேரேஜ்) புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பதினொரு காா்கள் எரிந்து நாசமாகியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: துவாரகா பகுதியில் உள்ள துல் சிராஸில் உள்ள கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து புதன்கிழமை அதிகாலை 2.58 மணிக்கு தகவல் கிடைத்தது. தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்துக்கு ஒன்பது தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. தீயணைப்பு நடவடிக்கை அதிகாலை 4.05 மணி வரை நீடித்தது.தீ விபத்தில் பதினொரு காா்கள் எரிந்து நாசமாகின. சில உதிரி பாகங்கள் சேதமடைந்தன என்றாா் அவா்.
இதற்கிடையே, துவாரகா செக்டாா் 23 காவல் நிலையத்தில் அதிகாலை 3.12 மணிக்கு தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது என்று துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: ஸ்ரீ ஷியாம் ஆட்டோமொபைல் அருகே நிறுத்தப்பட்டிருந்த 10 முதல் 12 காா்கள் தீப்பிடித்து எரிந்ததாக தீப்பிடித்த கேரேஜின் உரிமையாளா் ரித்திக் தெரிவித்துள்ளாா்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும், சம்பவம் குறித்த விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன. அதிகாலை 4.30 மணியளவில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவா் கூறினாா்.