தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய பாலிடிக்ஸ்
கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். முன்னதாக, அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு நான்கு இடங்கள் கிடைத்தன. பின்னாளில் இலைக்கட்சி தலைவர்களை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார், அண்ணாமலை. இதனால், பா.ஜ.வுடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்துக்கொண்டது.
இந்தச்சூழலில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து, 'அ.தி.மு.க கூட்டணியை முறித்துக்கொண்டதே தோல்விக்குக் காரணம்' என பா.ஜ.க-வுக்குள் களேபரம் வெடித்தது.

உருவாகும் கூட்டணி... மாறும் தலைமை?
இந்தச்சூழலில்தான் அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதில், 'அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமையுமா?' என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதற்கிடையில்தான் அமித் ஷா, எடப்பாடி சந்திப்பு நடந்தது. அதைத்தொடர்ந்து அண்ணாமலையைச் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "எந்த பொறுப்பிலும், தொண்டனாகவும் வேலை செய்யத் தயாராக இருக்கிறேன். என்னால் யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது" எனத் தெரிவித்தார். இதனால் அண்ணாமலை விரைவில் மாற்றப்பட்டுவார் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது.
இப்படி இந்த விவகாரம் ஒருபக்கம் அனலாய் தகித்துக்கொண்டிருக்கும் சூழலில்தான் மறுபக்கம் தலைவர் பதவியைப் பிடிக்க நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட தலைவர்கள் கோதாவில் குதித்திருக்கிறார்கள்.

மாநில தலைவர் ரேஸ்
இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், "மாநில தலைவர் பதவியைப் பிடிப்பதற்கான ரேஸில் நயினார்தான் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அமித்ஷாவின் ஆதரவு இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க-வுக்கு வந்தபோதே நயினாருக்கு மாநில தலைவர் பதவியை எதிர்பார்த்தார். டெல்லியும் ஓகே சொல்லிவிட்டது. பிறகு அது நடக்கவில்லை. அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாகத் திராவிட கட்சிகளுக்குச் செல்ல திட்டம் வகுத்தார். அப்போது அவரை டெல்லிக்கு அழைத்து சமாதானம் செய்தது அகில இந்தியத் தலைமை.
இந்தச்சூழலில்தான் நயினாருக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க-வுடன் கூட்டணியை எளிதாக அமைக்கலாம் என டெல்லி யோசிக்கிறது.
முன்னாள் மாநில தலைவர் என்கிற முறையில் அகில இந்தியத் தலைவர்களுடனும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தரப்பிலும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நல்ல தொடர்பு இருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என நினைத்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. எனவே தனக்கு மீண்டும் மாநில தலைவர் பதவிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் எல்.முருகன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் இருக்கிறார்கள்" என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "எடப்பாடி அளித்த புகாரால்தான் அண்ணாமலையை மாற்ற பா.ஜ.க முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்த கோரிக்கையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க வைத்துவிட்டது. அப்போது டெல்லி கண்டுகொள்ளவில்லை. தற்போது அண்ணாமலையை மாற்ற வேண்டும் எனப் புகார் கொடுத்திருப்பது சீனியர் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்தான். வானதி, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகிய தலைவர்களுக்குத்தான் புகார் அளித்திருக்கிறார்கள். அதில், 'அண்ணாமலையைத் தலைவராக வைத்திருந்தால் 2026ல் பா.ஜ.க-வுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும்.
நடந்து முடித்த தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு 18% வாக்குகளும், அ.தி.மு.க-வுக்கு 20% வாக்குகளும் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க-வின் வாக்கு சதவீதம் 10 - 12% ஆகக் குறைந்துவிடும். பா.ஜ.க-வின் வாக்கு 23% ஆக உயரும். 2031-ல் ஆட்சியைப் பிடித்துவிடுவோம்' என அண்ணாமலை டேட்டா கொடுக்கிறார். இது அவரின் ஆசை மட்டும்தான். அப்படி நடக்கவில்லை என்றால் என்ன செய்வது?. வலுவான கூட்டணி அமைப்பதுதான் சரியாக இருக்கும்' என ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள்.

மேலும் அ.தி.மு.க கூட்டணியை பா.ஜ.க தலைமை விரும்புகிறது. அதற்காகவே அ.தி.மு.க தலைவர்களையும் அழைத்துப் பேசுகிறார்கள். இதற்கு அண்ணாமலைதான் தடையாக இருக்கிறார். இந்தச்சூழலில்தான் புகாரும் கிளம்பியிருக்கிறது. எனவேதான் அவரை மாற்றும் முடிவுக்கு அகில இந்தியத் தலைமை வந்திருக்கிறது. அடுத்த தலைவருக்கான ரேஸில் நயினார் முதலிடத்தில் இருக்கிறார்.
இதற்கு, தென் மாவட்டத்தில் எம்.எல்.ஏ-வாகவும், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க நெளிவு, சுளிவு தெரியும். கூடவே முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்கும் என டெல்லி கருதுகிறது. இதுவரை மாநில தலைவராக நாடார், கவுண்டர் சமுதாயத்தினர் இருந்து விட்டார்கள். அடுத்ததாக வன்னியர், முக்குலத்தோருக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் வன்னியர் சமுதாயத்தில் பா.ஜ.க-வுக்கு பிரபலமான தலைவர் இல்லை. எனவேதான் நயினாருக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்றார்.
எனினும் பாஜக தலைமை அதிரடி முடிவுகளுக்கு பெயர் பெற்றது. கடைசி நேர ட்விஸ்ட்களும் எதிர்பார்க்கலாம். எல்லாம் வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்து போன பிரகு தான் அறிவிப்பாக வெளிவரும் என்கிறார்கள் டெல்லி பாஜக தரப்பினர்.