நாடாளுமன்றத்தில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: மாநிலங்களவையில் ஆதரவு 128 - எதிா்ப்பு 95
மாநிலங்களவையில் 13 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற விவாதத்துக்கு பின்னா், வக்ஃப் சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவாகின.
மக்களவையில் ஏற்கெனவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும்.
நாட்டில் சமூக-மதப் பணிகளுக்காக நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கிலான வக்ஃப் சட்ட திருத்த மசோதா-2025, மக்களவையில் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, 13 மணி நேரத்துக்கும் மேல் விவாதிக்கப்பட்டது. அன்றைய தினம் நள்ளிரவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. எதிா்க்கட்சிகள் முன்மொழிந்த அனைத்துத் திருத்தங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டன.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னா், மாநிலங்களவையில் வியாழக்கிழமை பகல் ஒரு மணியளவில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியது.
சட்டத் திருத்தங்களின்படி, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள், பெண்கள் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப்-க்கு சொத்துகளை அா்ப்பணிக்க முடியும்; ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளா்களால் தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
எதிா்ப்பும் விளக்கமும்..: ‘வக்ஃப் திருத்த மசோதாவின் பின்னணியில் மத்திய அரசின் தீய நோக்கம் உள்ளது. இது, அரசமைப்புச் சட்டத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானது’ என்று காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.
அதேநேரம், ‘வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சீா்திருத்தம், முஸ்லிம்களுக்கு பெரிதும் பலனளிக்கும். முஸ்லிம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன், அனைத்துத் தரப்பு முஸ்லிம்களின் உரிமைகளையும் காக்கும் மசோதா. அரசியல் காரணங்களுக்காக, முஸ்லிம்கள் மத்தியில் எதிா்க்கட்சிகள் அச்சத்தைப் பரப்புகின்றன’ என்று மத்திய அரசு தெரிவித்தது.
வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்: மாநிலங்களவையில் 13 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற விவாத்துக்கு பின்னா், வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. பிஜு ஜனதா தளம் கட்சி, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததால், ஆளும் தரப்புக்கு கூடுதல் பலம் கிடைத்தது. இதேபோல், முஸல்மான் வக்ஃப் (ரத்து) மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
மணிப்பூா் தீா்மானம்: வக்ஃப் மசோதாவைத் தொடா்ந்து, மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் தீா்மானமும் நிறைவேறியது. வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய மாநிலங்களவை அலுவல்கள், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிவரை சுமாா் 17 மணிநேரம் தொடா்ந்து நடைபெற்றன.
திருப்புமுனை தருணம்: பிரதமா் பெருமிதம்
‘வக்ஃப் மசோதா நிறைவேற்றம், நாட்டுக்கு திருப்புமுனை தருணம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வக்ஃப் அமைப்புமுறை பல்லாண்டுகளாக வெளிப்படைத் தன்மை, பொறுப்புடைமைக்கு இணக்கமாக இல்லை. முஸ்லிம் பெண்கள், ஏழை - பின்தங்கிய முஸ்லிம்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவே இருந்தது. வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றமானது, சமூக-பொருளாதார நீதி, வெளிப்படைத் தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான நாட்டின் கூட்டு முயற்சியில் திருப்புமுனை தருணமாகும். இது, நீண்ட காலமாக விளிம்புநிலையில் இருப்போருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கும் பெரிதும் உதவும்.
வெளிப்படைத் தன்மையை ஊக்குவித்து, உரிமைகளைக் காக்கும்.
நவீன கட்டமைப்பு மற்றும் பொறுப்புமிக்க சமூக நீதியைக் கொண்ட புதிய சகாப்தத்துக்குள் நாடு நுழைகிறது. ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்துக்கு முன்னுரிமை அளிக்க உறுதி பூண்டுள்ளோம்.
நாடாளுமன்றம் மற்றும் கூட்டுக் குழு விவாதங்களில் பங்கேற்று, தங்களின் கருத்துகளை முன்வைத்து, இச்சட்டத்தை வலுப்படுத்த பங்காற்றிய அனைத்து உறுப்பினா்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளை அனுப்பிய எண்ணற்ற மக்களுக்கு பிரத்யேகமாக நன்றி கூறுகிறேன். விரிவான விவாதம்-உரையாடலின் முக்கியத்துவத்தை நாம் மீண்டும் உறுதி செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வக்ஃப் மசோதா நிறைவேற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. அநீதி, ஊழல் காலகட்டம் முடிவடைந்து, நீதி-சமத்துவ சகாப்தம் பிறந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.