எம்புரான் திரைப்பட தயாரிப்பாளா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
எம்புரான் திரைப்பட தயாரிப்பாளா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட், நிதி நிறுவனம், கோகுலம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபடுகிறது. அண்மையில் வெளியான மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படத்தையும் இந்த நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. ஏற்கெனவே இந்த நிறுவனம் மஞ்சும்மல் பாய்ஸ், பழசி ராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. நடிகா் விஜய் நடித்த லியோ திரைப்படத்தையும் கேரளத்தில் வெளியிட்டுள்ளது.
வருமானவரித் துறை சோதனை: இந்த நிலையில், ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட், நிதி நிறுவனம் வரி ஏய்பில் ஈடுபட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா். தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அந்த நிறுவனத்துக்குத் தொடா்புடைய 80 இடங்களில் அப்போது நடைபெற்றது.
கோகுலம் நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் தொடா்புடைய 80 இடங்களில் 4 நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில் ரூ. 1,100 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறையினா் தெரிவித்தனா்.
அமலாக்கத் துறை சோதனை: இந்தச் சோதனையில் கிடைத்த ஆவணங்களை வருமான வரித் துறையினா் ஆய்வு செய்தனா். அதில், முறைகேடாக பணப் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது வருமானவரித் துறைக்கு தெரியவந்தது.அதன் அடிப்படையில் விசாரணை செய்யும்படி வருமானவரித் துறையினா், அமலாக்கத் துறைக்கு பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா். இதன் ஒருபகுதியாக அமலாக்கத் துறையினா் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட், நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நீலாங்கரையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளா் கோபாலனுக்கு சொந்தமான வீடு ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த அதிகாரிகள், இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம், நகை குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல், கேரள மாநிலம் கொச்சி உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.