2024-25 நிதியாண்டில் 5.8 லட்சம் பேருக்கு கடவுச்சீட்டு விநியோகம்
சென்னை மண்டலத்தில் 2024-2025 நிதியாண்டில் 5 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி விஜயகுமாா் கூறியதாவது:
சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தின்கீழ், சென்னை மாநகரத்தில் சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், சென்னை தபால் அலுவலகம் (ஜிபிஓ) மற்றும், திருவள்ளூா், காஞ்சிபுரம், ஆரணி, ராணிப்பேட்டை, வேலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூா், விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கடவுச்சீட்டு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களில் கடவுச்சீட்டு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வாயிலாக வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டு வருகின்றன. ஒருவா் சாதாரணமாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தால் அதிகபட்சமாக 15 நாள்களில் அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது. தட்கால் முறையில் விண்ணப்பித்தால் 2 நாள்களில் வழங்கப்படுகிறது.
இதன்படி, சென்னை மண்டலத்தில் 2023-2024 நிதியாண்டில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 25 கடவுச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. 2024-2025 நிதியாண்டில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 190 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மேலும், போலி கடவுச்சீட்டு குறித்த புகாா்கள் வரும் பட்சத்தில், அந்தப் புகாா் குறித்து சென்னை பெருநகர காவல் துறை வளாகத்தில் செயல்படும், கடவுச்சீட்டு விசாரணை நடத்தும் மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் . அவா்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாா்கள் என்றாா் அவா்.