"விடுதலைக்கு முன்பு சினிமா மாணவன்; இப்போது மார்க்சிஸ்ட் மாணவன்" - வெற்றி மாறன் ஓப்பன் டாக்
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் இயக்குநர் வெற்றி மாறன் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
அப்போது இயக்குநர் பாலு மகேந்திரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த அவர், "இன்றைக்கு சினிமாவில் உள்ள தேடல், சினிமாவின் மாணவனாக இருப்பதற்குச் சமூகத்தோடு எனக்கு இருக்கிற தேடலும், தொடர்பும், சமூகத்தின் மீதான கோபமும், அவருடன் இருந்ததால்தான் எனக்கும் இருக்கிறது. சினிமாவில் எனக்கு ஒரு அடையாளம் இருக்கிறது என்றால் அதற்கு அவர்தான் காரணம்" என்றிருக்கிறார்.

மதுரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "ஆடுகளம் படத்தை மதுரையில் எடுப்பதற்குக் காரணம் இந்த ஊர் மக்கள்தான். இங்கு இருக்கும் மக்கள் உரிமையாக அன்பு செலுத்துபவர்கள். சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது மதுரையின் ஸ்பெஷல்.
ஆடுகளம் எடுக்க இரண்டரை ஆண்டுகள் இங்கு இருந்தேன். அதற்குக் காரணம் இந்த ஊரின் தன்மைதான்" என்று நெகிழ்ச்சியாகப் பேசி இருக்கிறார்.
ஒரு நாவலைப் படமாக எடுப்பது குறித்த கேள்விக்கு, "ஒரு நாவலைப் படமாக எடுப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது, நாவல் ஈர்க்க வேண்டும். அந்த நாவலின் அடிப்படை சிந்தனை உன்னை முன் நகர்த்தினால், அந்த நாவல் சினிமாவாக எடுக்கத் தகுதியானது எனப் பாலுமகேந்திரா சார் கூறுவார்.
அவர் வேலை செய்வதைப் பார்த்ததுதான் என் அனுபவம். வெட்கை நாவல் அசுரன் படமாக வந்தபோது சிலருக்குப் பிடிக்கவில்லை. பூமணிக்கே இந்தப் படத்தின் மீது விமர்சனங்கள் இருந்தது" என்று பதிலளித்திருக்கிறார்.

விடுதலை குறித்த பேசிய அவர், "விடுதலை படம் என்பது எனது 45 ஆண்டு வாழ்க்கையை விட நிறையக் கற்றுக்கொடுத்தது. நிறைய மனிதர்கள், தலைவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.
விடுதலை படத்திற்கு முன்பு, மேடையை அலங்கரிக்கும் கவர்ச்சி பேச்சுகளைப் பேசும் தலைவர்கள்தான் என் கண்ணுக்குத் தெரிந்தார்கள். மக்களோடு நின்று மக்களுக்கான விடுதலையை வென்றெடுத்த தலைவர்களை அப்போது தெரியவில்லை.
விடுதலைப் படத்திற்குப் பிந்தைய 4 ஆண்டு நிறைய அனுபவம் கிடைத்துள்ளது. விடுதலைக்கு முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது மார்க்சிஸ்ட் மாணவனாகவும் மாறி இருக்கிறேன்.

எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சியம் இல்லை என்றால் அது மக்களுக்கு எதிராக நின்றுவிடும் என்பதுதான் என்னுடைய புரிதல்.
விடுதலை இரண்டாம் பாகத்தில் ரொம்ப பேசுறாங்கப்பானு சொன்னார்கள். இந்த மேடையில் நிற்பது மரியாதையாக நினைக்கிறேன்.
இந்த மாநாட்டில் ஒரு நிகழ்வில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...