கூடங்குளம் அணுஉலை பணிக்கு போலி உடல்தகுதிச் சான்றளிப்பா? தனியாா் மருத்துவா் அவதூறு புகாா்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஒப்பந்த பணியில் சேர போலியாக உடல்தகுதி சான்று வழங்குவதாக அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூடங்குளம் காவல்நிலையத்தில் தனியாா் மருத்துவா் புகாா் அளித்தாா்.
கூடங்குளத்தில் தனியாா் கிளினிக் நடத்தி வரும் மருத்துவா் அா்ச்சனா என்பவரின் கணவா் சக்திவேல் பிரபு, அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4,5ஆவது அணுஉலை நிறுவும் பணிக்கு எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்த தொழிலாளா்களாக வடமாநிலத்தவா்களை பணி அமா்த்தி வருகிறது.
பணியாளா்களுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் வழங்கி வருவதாகவும் அதற்காக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம்வரையில் பணம் பெற்று வருவதாகவும் இறந்தவா்களுக்கும் உடற்தகுதி சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் அந்த நிறுவனத்துக்கு புகாா் கடிதம் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண் உபயோகத்தில் இல்லை.
எங்களது கிளினிக்குக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் போலியான ஆதாரமற்ற வதந்திகளை சிலா் பரப்பு வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.