தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
தாராவி: `ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள், சட்டவிரோத குடியிருப்பாளர்கள்' - NMDPL அறிவிப்பால் அதிர்ச்சி
தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம்
ஆசியாவில் அதிக குடிசையுள்ள பகுதியாக பார்க்கப்படும் மும்பை தாராவியில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி நிறுவனத்திடம் ஒப்படைத்து இருக்கிறது.
இதையடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த அதானி நிறுவனம் மாநில அரசுடன் இணைந்து நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (NMDPL) என்ற பெயரில் கூட்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறது.

இந்நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மாநில அரசின் தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையத்தின் துணையுடன் தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கி இருக்கிறது. இது வரை 94500 குடிசைகளுக்கு நம்பர் போடப்பட்டுள்ளது.
இது தவிர 89 ஆயிரம் குடிசைகள் டிஜிட்டல் முறையில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 70 ஆயிரம் குடிசைகளில் வீட்டின் அளவு கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
தற்போதும் குடிசைகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணி மற்றும் தேவையான ஆவணங்களை பெறும் வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச வீடு பெற தகுதியை நிரூபிக்க தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தது.
நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (NMDPL)
அதன் அடிப்படையில் ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது தங்களது வீட்டில் நம்பர் போட அனுமதி கொடுக்காதவர்கள் சட்டவிரோத குடியிருப்புவாசிகளாக கருதப்படுவர் என்று நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''ஏப்ரல் 15-ம் தேதிக்குள் இலவச வீடு பெற தகுதியான ஆவணங்களை தாக்கல் செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்களாக கருதப்பட்டு அதற்கு தகுந்தபடி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கொடுத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில் துணை மாவட்ட ஆட்சித்தலைவர் இலவச வீடு பெறுபவர்கள், இலவச வீடு பெற தகுதியில்லாதவர்கள் பட்டியலை தயார் செய்வார்.
கணக்கெடுப்பில் பங்கேற்காதவர்களை 'ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை' என்று கூறி கணக்கெடுப்பு வரைவு இணைப்பு 11 அறிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என்று நவ்பாரத் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் தாராவி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிகமானோர் வெளியூர்களில் வசிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் இன்னும் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர்.
இது குறித்து தாராவி பச்சாவ் அந்தோலன் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ராஜு கோர்டே கூறுகையில், ''தாராவி மேம்பாடு திட்டம் என்பது ஒரு குடிசை மேம்பாட்டுத் திட்டம் ஆகும். எனவே சட்டத்தின்படி அரசு நிறுவனங்கள் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது.

வரைவு இணைப்பு II கணக்கெடுப்பு அறிக்கை, மக்கள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் தயாரிக்கப்படுகிறது. அதை தயாரித்து வெளியிட்டவுடன் மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிப்பது கட்டாயமாகும்.
இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பாத மக்களுக்கு நெருக்கடி கொடுக்க இது போன்ற யுக்தியை கையாள்கின்றனர். வரைவு இணைப்பு II வெளியிடுவது உண்மையில் எத்தனை பேர் இத்திட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.வி.ஆர் ஸ்ரீனிவாஸ் அளித்த பேட்டியில், ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடியும் முன்பு தாராவி மேம்பாட்டு திட்டத்தின் மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இது வரை மாஸ்டர் பிளான் வெளியிடப்படவில்லை.

தாராவியில் குடோன், தொழிற்சாலைகள் வைத்திருக்கும் பலர் இன்னும் தங்களது ஆவணங்களை தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு அதானி நிறுவனம் எப்படி தொழிற்சாலைகள், குடியிருப்புகள் ஒதுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தாராவி குடிசைவாசிகளுக்காக ரயில்வே நிர்வாகத்திடம் வாங்கிய நிலத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணி ஏற்கெனவே தொடங்கி நடந்து வருகிறது. இது தவிர இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கு மும்பை புறநகர் பகுதியில் இருக்கும் மூடப்பட்ட குப்பை கிடங்கில் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தாராவி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1.4 லட்சம் பேர் மாற்று வீடு பெற இருக்கின்றனர்.